பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அருளறம்

ஆபிரகாம் லிங்கனைப்பற்றி எண்ணும் போது ‘மனிதத்தன்மை’ நம் நினைவில் தோன்றும். கார்ல் மார்க்சைப்பற்றி எண்ணும் போது ‘பொருளியற் கொள்கை’ நம் உள்ளத்தில் தோன்றும். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் பற்றி எண்ணும்போது ‘தொண்டு’ நம் உள்ளத்தில் பளிச்சிடும். அண்ணல் காந்தியடிகளைப் பற்றி எண்ணும் போது உலக மக்கள் உள்ளத்தில் தோன்றுவது என்ன என்று கேட்டால், ‘அருளறம்’ (அஹிம்சை) என்று தயங்காமல் கூறிவிடலாம். அடிகள் உலகிற்கு வழங்கிய அரும் பொருள் அருளறம்தான். அக் கொள்கை தொன்று தொட்டு ஏட்டளவிலும் பேச்சளவிலுமே நின்று நிலவி வந்தது. ஆனால் அக்கொள்கையை நடைமுறை வாழ்விலும், அரசியலிலும் புகுத்தி வெற்றி பெற்ற பெருமை காந்தி அண்ணலையே சாரும்.

அருளறம் அடிகளையும் வள்ளுவரையும் நெருக்கமாகப் பிணைக்கிறது. அருளுடைமை, அன்புடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, ஒப்புரவறிதல், கண்ணோட்டம், கொல்லாமை, புலான் மறுத்தல், வெகுளாமை, வெருவந்த செய்யாமை என வள்ளுவரால் விரித்துரைக்கப்படும் அறங்கள் யாவும் அருளறத்தின்