பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

என்று கருதினார். முதல் வகுப்புச் சீட்டு ஒன்று வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினார். வண்டி மாரிட் ஜ்பர்க் என்ற நிலையத்தை அடைந்தது, காந்தியடிகள் ஏறியிருந்த அதே பெட்டியில் ஒரு வெள்ளைக்காரரும் ஏறினார் ; காந்தியடிகளை மேலும் கீழும் உற்றுப்பார்த்தார் ; கறுப்பு மனிதர் ஒருவர் முதல் வகுப்பு வண்டியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருடைய உள்ளம் பெரும் சங்கடத்திற்கு ஆளாகி விட்டது போலும்! அவர் உடனே வெளியில் சென்று இரண்டு இரயில்வே அதிகாரிகளை அழைத்துக் கொண்டு வந்தார். எல்லோரும் காந்தியடிகளை உற்றுப்பார்த்துக் கொண்டு தின்றார்கள். கடைசியில் பிறிதோர் அதிகாரி அங்கு வந்தார். அவர் அடிகளைப்பார்த்துக் ‘கீழே இறங்கு’ சாமான் ஏற்றும் வண்டியில் போய் ஏறிக்கொள்!’ என்றார்.

‘என்னிடம் முதல் வகுப்புச் சீட்டு இருக்கிறது ஐயா!’ என்று அடிகள் பணிவாகச் சொன்னார்.

‘அக்கறையில்லை ; இந்த வண்டியில் உனக்கு இடம் கொடுக்க முடியாது!’ என்று அவ்வதிகாரி கூறினார்.

‘டர்பனில் இந்த வண்டியிலே தான் எனக்கு இடம் கொடுக்கப்பட்டது. இதிலேதான் நான் பயணம் செய்வேன்’ என்று உறுதியான குரலில் கூறினார் அடிகள்.

காந்தியடிகளின் உறுதியான மறுப்புரையைக் கேட்ட அதிகாரிக்குச் சினம் பொங்கியது. அவருடைய மீசை துடித்தது. ‘நீயாக இந்த வண்டியை விட்டு இறங்குகிறாயா? அல்லது போலீஸ்காரனை