பக்கம்:வழிகாட்டி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வழிகாட்டி

பெருங்கடவுள்

இவ்வளவு சிறப்பை உடையவன் யாவராலும் துதிப்பதற்குரியவன்; முனிவருட் பெரியாரும் தேவருட் பெரியாரும் ஏத்தும் கடவுள்; அவர்கள் யாவரும் போற்றிப் புகழ்ந்து பாடும் பெரிய திருநாமத்தையுடைய தெய்வம். பெரியவரெல்லாம் ஏத்துவதனால் அவன் பெயர் பெரும்பெயராக விளங்குகிறது.

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்!

(தேவரும் முனிவருமாகிய பெரியவர்கள் துதிக் கின்ற பெரிய திருநாமத்தையுடைய தலைவனே!)

சூரசங்காரன்

முருகனைப் பெரியோர் ஏத்துவதற்குக் காரணம் அவன் செயற்கரிய செய்த பெரியவனாக இருத்தல். தேவரெல்லாம் அஞ்சி நடுங்க ஆணை செலுத்திய சூரனைக் குலத்தோடும் அழித்தவன் முருகன். சூரனை அழிப்பதற்குக் காரணமான அவன் வலிமை எங்கும் காணக் கிடைக்காத பெரிய வலிமை.

சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!

(சூரனது குலத்தை அழித்த வீரம் பொருந்திய மார்பகத்தையும் மிக்க வலிமையையும் உடையவனே)

யுத்தத்தில் முருகன் புகுந்தான் என்றால் அவனை விஞ்சுவார் யாரும் இல்லை. யாவரினும் மிக்குச் சிறந்து தோன்றுவான். அத்தகைய தலைவன் அவன்.

போர்மிகு பொருந குரிசில்! (போரிலே சிறந்து நிற்கும் வீரனே தலைவனே)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/170&oldid=643855" இலிருந்து மீள்விக்கப்பட்டது