பக்கம்:வழிகாட்டி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வழிகாட்டி

இவ்வாறு உருவமும் இயல்பும் விரித்து, செயலும் பெயரும் உரைத்து, இடமும் வழிபாட்டு முறையும் வகுத்து, உபமானத்தாலும் வருணனையாலும் முருகனை நம் அகக்கண்முன் எழுந்தருளச் செய்கிறார் நக்கீரர்.

முருகனைப்பற்றிய நூலாக இருந்தாலும் இதன் கண் நக்கீரர் காலத்தில் வாழ்ந்த தமிழர் வாழ்க்கையைப் பற்றிய செய்திகளும் இடையிடையே விரவியிருக் கின்றன. அக்காலத்து நாகரிகமும், முயற்சியும், வழக்க மும், வழிபாடும், உடையும் ஊணும், அணியும், படை யும், இசையும், கூத்தும் இன்னபடி இருந்தன என்பதை இந்நூலைக் கொண்டு ஒரளவு தெரிந்து கொள்ளலாம்.

முருகன், இந்திரன், நான்முகன், திருமால், சிவ பிரான், உமாதேவி, திருமகள், யமன், கந்தருவர், முப் பத்துமூன்று தேவர், பஞ்சபூதத் தலைவர், பதினெண் கணத்தார் ஆகியவர்களைப் பற்றிய செய்திகளை அக் காலத்துத் தமிழர் உணர்ந்திருந்தனர். அந்தணர் வேதம் ஒதினர்; வேள்வி செய்தனர். முருகனுக்குரிய ஆறெழுத்தை ஜபிக்கும் முறையும் பட்டினி இருந்து வழிபடும் முறையும் இருந்தன. மலைநாட்டு மக்கள் ஆட்டைப் பலியிட்டுப் பூசை போட்டார்கள். ஊருக்கு ஊர் திருவிழா நடைபெற்றது.

மலைச்சாரல்களில் பல ஊர்கள் இருந்தன. குறவர் அங்கே வாழ்ந்தனர். வேலனும், குறமகளும் அவர்களுக்குத் தெய்வ நம்பிக்கையை ஊட்டி வந்தனர். தேனை மூங்கிற் குழாயிலே நிரப்பிப் பல நாள் புளிக்க வைத்து அதைக் குறவர் உண்டனர். குறிஞ்சிப் பண்ணைப் பாடித் தொண்டகப் பறையை அடித்துக் குரவைக் கூத்தாடினர். தினையரிசியைச் சமைத்து உண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/30&oldid=643584" இலிருந்து மீள்விக்கப்பட்டது