பக்கம்:வழிகாட்டி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த கதை மாலை நேரம். தண்ணிய தென்றல் மெல்ல வீசியது. சூரியன் தன் கிரணங்களை மடக்கிக் கொண்டு மேல் கடலிலே குளிக்க விரைந்து கொண்டிருந்தான். அப்போது பாண்டியன் தன் அரண்மனையின் மேல் மாடத்தில் தென்றற் காற்றையும் வானத்துக் காட்சியை யும் நுகர்ந்து உலாவிக் கொண்டிருந்தான். சட்டென்று பாண்டியன் இயக்கம் தடைப்பட்டது. அவன் எதையோ கூர்ந்து கவனித்தான். தென்றலோடு வந்த புதுமை மணத்தில் அவன் நெஞ்சம் ஈடுபட்டது. அத்தகைய மென்மணத்தை அவன் இதுகாறும் தனியே கவனித்த தில்லை. சற்றே திரும்பிப் பார்த்தான். அவனுடைய பட்டமகிஷி மற்றொரு கோடியில் தன் கூந்தலை ஆற்றிக் கொண்டிருந்தாள். அவளிடத்திலிருந்து தென்றல் மணத் தைச் சுமந்து வந்தது. இவள் கூந்தலின் நறுமணமா இது! உயர் ஜாதி மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு போலும் என்று நினைந்து வியந்தான் பாண்டியன்.

மறுநாள் வழுதி அரசவையில் வீற்றிருக்கும் போது அருகில் உள்ள புலவர்களை நோக்கி, "நேற்று மாலை நான் ஒரு நறுமணம் நுகர்ந்தேன். அதன் மூலகாரணத்தை ஒர்ந்து கவி புனைய வேண்டும்" என்றான். இச்செய்தி சங்கத்தில் இருந்த 49 புலவர்களுக்கும் தெரிவிக்கப் பெற்றது. கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்கள் வீற்றிருந்து தமிழரசாட்சியை நடத்தி வந்த காலம் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/42&oldid=643597" இலிருந்து மீள்விக்கப்பட்டது