பக்கம்:வழிகாட்டி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வழிகாட்டி

வலியை உடையன; சோதி வீசுவன; வான நாடருக்கும் அடியாருக்கும் வேண்டியவற்றைக் கொடுத்துக் கொடுத்து அந்த வண்மையினாலே புகழைப் பெற்று விளங்கு பவை; கண்டார் உள்ளத்தை வசப்படுத்துவன. கழுத்தரு கில் உள்வாங்கியும் அப்பால் நிமிர்ந்தும் பொலியும் வீரத் தோள்கள் அவை. அழகு, ஒளி, புகழ், வீரம் என்னும் இந்த நான்கும் நிரம்பிய பன்னிரண்டு தோள்கள் படைத்தவன் முருகவேள்.

ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள். (பொன்னாரம் தொங்கும் அழகிய பெருமையையுடைய மார்பிலே உள்ள சிவந்த வரிகள் தம் வரையில் வர அவற்றை ஏற்றுக் கொண்டனவும், வலியையுடையன வும், ஒளி வீசி, கொடுத்தலால் பெற்ற புகழ் நிரம்பி, கண்டார் உள்ளத்தை வசமாக்கி, உள்வாங்கி மேலே நிமிர்ந்த தோள்கள் - அவற்றில் ஒவ்வொன்றும் இன்னது செய்யும் எனச் சொல்ல வருகிறார்.

பகடு - பெருமை. மொய்ம்பு - வலிமை. வசிந்து - கவர்ச்சி பெற்று.)

முருகன் உலகத்துக்கு ஒளி தருகின்ற சுடர்களுக்கும் ஒளி தருகின்றவன். பல்கதிர் விரிந்த திருமுகம் இந்த அருட்செயலை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு இணைந்த இரண்டு கைகள் அம்முகத்துக்குத் துணையாக நிற்கின்றன.

வானத்திலே சூரியன் செல்லும்போது ஒளியை வீசு வதோடு நிற்பதில்லை; வெம்மையையும் விடுக்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/94&oldid=643690" இலிருந்து மீள்விக்கப்பட்டது