பக்கம்:வழிப்போக்கன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

"தீர்க்காயுஷ்மான் பவ, தீர்க்க சுமங்கலீ பவ!" என்று தாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்தினர்களே, அந்த ஆசீர்வாதம் வீண் போகாது." அப்பாவுக்குச் சொல்லி அனுப்பக் கூடாதா? நீங்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதே அவருக்குத் தெரியாது. தங்களுக்கு ஜூரம் என்று கேள்விப்பட்டால் அவருக்குத் துக்கமே தாங்காது. பறந்து வந்து விடுவார் இங்கே."

"அவருக்குள்ள துன்பங்களோடு என்னுடைய கவலையும் எதற்கு என்றுதான் பேசாமல் இருந்துவிட்டேன். சாம்பசிவம் சமாசாரம்கூடச் சொல்லி அனுப்பவில்லை அவருக்கு. எனக்கும் அவரைக் கண்ணிலேயே கட்டி வைத்திருக்கிறது. நாங்கள் இருவரும் பால்ய சிநேகிதர்கள். பூசணிக்காய் காய்த்தால் அதை எடுத்துக்கொண்டு ஆற்காட்டுக்கு என்னைப் பார்க்க வந்துவிடுவார். அவ்வளவு பிரியம் என்னிடம் அவருக்கு..."

"நான் ஊருக்குப் போய் அவரை அனுப்புகிறேன்."

"உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேனே...நகைகள் கிடைத்து விட்டது பற்றி நான் மண்டி கணக்குப்பிள்ளை மூலமாகப் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். அதைப் பற்றி கவலை இனி உனக்கு வேண்டாம். குறவனுடைய மனைவி எங்கே இருக்கிறாள் என்று தெரியுமா உனக்கு?"

தானே பிரஸ்தாபிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த விஷயத்தைச் சர்மாவே கூறிவிட்டதும், சுந்தரம் மன நிம்மதி அடைந்தான். போலீசுக்குச் சொல்லாமல் இருக்கிறோமே என்ற திகில் இதுவரை அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்தது. இப்போது அந்தக் கவலையும் தீர்ந்துவிட்டது "இங்கே முள்ளிப்பாளையத்தில்தான் நாடகக் கொட்டகைக்கு அருகில் இருப்பதாகக் குறவன் சொன்னான். போய்த் தேடிப் பார்க்க வேண்டும்' என்றான் சுந்தரம்.

"அப்படியா? வண்டிக்கார சாயபுவையும் அழைத்துக் கொண்டு போ. இரண்டு பேருமாகப் போய்ப் பாருங்கள்... கிடைத்தால் எனக்குத் தகவல் சொல்லி அனுப்பு-" என்றார் சர்மா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/123&oldid=1313654" இலிருந்து மீள்விக்கப்பட்டது