பக்கம்:வழிப்போக்கன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

குதிரை வண்டி முள்ளிப்பாளையத்தில்போய் நின்றது. குறவன் மனைவி குடியிருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்தனர் இருவரும். ஆனால் அங்கே குறவன் மனைவியைக் காணோம் குடிசை மட்டும் குட்டிச்சுவராக நின்று கொண்டிருந்தது.

"இந்த வுட்லேதான் இருந்தான் அந்தக் குறவன். அவன் பெண்சாதி இந்த வீட்டைவிட்டுப் போயி ரொம்ப நாளாச்சு" என்றார்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்.

"எங்கே போனாங்கன்னு தெரியுமா?" என்று கேட்டான் சுந்தரம்.

"யார் கண்டாங்க? எங்கே போனாளோ? திருடன் பெண்சாதிக்கு நிம்மதி ஏது? போலீசுக்குத் தொந்தரவு தாங்காமல் ஊரைவிட்டுப் போயிட்டா அவ" என்றாள் ஒரு கிழவி.

சுத்தரம் சோர்ந்த உள்ளத்துடன் குறவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்துக்கொண்டான். அவன் மனம் வேதனைபட்டது.

சுந்தரம் பெருந்துறை சானடோரியத்துக்கு வந்து சேர்ந்த போது, சகுந்தலா அங்கு கவலையே உருவாகக் காமுவின் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருப்பதைக் கண்டனர்.

"நீ எப்போது வந்தாய் சகுந்தலா; இங்கு வரப் போவதாக என்னிடம் சொல்லவேயில்லையே!" என்றான் சுந்தரம், வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டவனாக.

"சொல்லாமல் போகிறவர்களிடம் சொல்விக் கொண்டா வருவார்கள்?" என்று சுந்தருக்கு மட்டுமே புரியும்படி மறை பொருளாகக் கூறினாள் சகுந்தலா.

"யாருக்கும் சொல்லாமல் தன் கணவர் சிறைக்குப் போனது பற்றியே சகுந்தலா அவ்வாறு கூறுகிறாள்" என்று காமு எண்ணிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/124&oldid=1313656" இலிருந்து மீள்விக்கப்பட்டது