பக்கம்:வழிப்போக்கன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


அவன் விருப்பத்தையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?' என்று எண்ணிக்கொண்டார் சர்மா.

ராமநாதன் ஐ. சி. எஸ். டெல்லி செக்ரடேரியட்டில் ஒரு முக்கிய அதிகாரி. சர்மாவின் மகளைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவருடைய அதிருஷ்டம் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போய் உச்ச நிலையை அடைந்தது. அவ்வளவு அதிருஷ்டம் கூடாது என்பதாலோ என்னவோ சகுந்தலாவை ஈன்றெடுத்த மறு வருடமே அவருடைய மனைவி இறந்துவிட்டாள். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள ராமநாதனுக்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்புறம் அவருக்கு மறுமணம் செய்துகொள்ளும் யோசனையே எழவில்லை. வாழ்நாள் முழுதும் ஏகாங்கியாகவே வாழ்ந்து விடுவதென முடிவு செய்து, அதன்படியே வாழ்ந்தும் வந்தார் அவர். இப்போது சீமைக்கு செல்லுமுன் ஆற்காட்டுக்கு ஒருமுறை வந்து, சகுந்தலாவின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்து விட விரும்பினர்.

தாம் எழுதியிருந்தபடியே சனிக்கிழமை இரண்டு மணிக்கெல்லாம் பெரிய கார் ஒன்றில் பெட்டியும், படுக்கையும், பழக்கூடைகளுமாக வந்து இறங்கினார் அவர். சகுந்தலாவுக்குப் பட்டுத் துணிகள், சர்மாவுக்குக் காஷ்மீர் சால்வை, சுந்தரத்துக்கு 'ட்வீட்'துணி, காவேரி பாட்டிக்கு மான் தோல் ஆசனம்-இவ்வளவும் வாங்கி வந்திருந்தார் அவர்.

மாப்பிள்ளை தனியாகக் காரில் வந்து இறங்குவதைக் கண்டபோது, சர்மாவுக்குத் தம் மகளின் நினைவு தோன்றிக் கண்ணீர் வந்துவிட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டே, “வாங்க, மாப்பிள்ளை!” என்று வரவேற்றார்.

சுந்தரும் சகுந்தலாவும் பெரியவர்களாக வளர்ந்து விட்டிருப்பதைக் காண ராமநாதனுக்கு விசித்திரமாயிருந்தது. சுந்தரை முன் ஒரு முறை ஆற்காட்டுக்கு வந்தபோது பார்த்ததுதான்; இப்போது அவன் முன்னிலும் அதிகமாகக் கவர்ச்சியும் கம்பீரமும் வாய்ந்தவனாகக் காணப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/27&oldid=1321007" இலிருந்து மீள்விக்கப்பட்டது