பக்கம்:வழிப்போக்கன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


'நம் சகுந்தலாவுக்கு ஏற்ற ஜோடி இவன்!' என்று எண்ணிப் பூரித்தது அவர் உள்ளம்.

“சகுந்தலாவை சுந்தருக்கே கொடுத்துவிடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார்கள். உங்கள் அபிப்பிராயம் என்னவோ?” என்றான் ராமநாதன்.

"எனக்கு இதில் பூரண சம்மதமே. கங்காதரய்யர் என் ஆப்த நண்பர்தான். ஆயினும் பையனுக்கு...”

"படிப்பு போதவில்லை; வயசாகி விட்டது என்று நினைக்கிறீர்கள். அவ்வளவுதானே? அதைப்பற்றி கவலையில்லை. அப்படி அவனுக்கென்ன வயசாகிவிட்டது? அவனை நாமே படிக்க வைத்தால் போகிறது!" என்றார் ராமநாதன்.

"எதற்கும் சுந்தரின் ஜாதகத்தைப் பார்த்த பிறகே எதையும் முடிவு செய்ய வேண்டும்."

"நீங்கள் வேறு எந்தப் பையனையாவது மனதில் வைத்துக் கொண்டிருந்தால் என்னிடம் தாராளமாகச் சொல்லுங்கள். உங்களுக்கு எது சரியாகப் படுகிறதோ, அதுவே எனக்கும் சரி. சகுந்தலாவின் நன்மையில் உங்களுக்கு இல்லாத அக்கறையா எனக்கு?" என்றார் மாப்பிள்ளை.

"நான் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை; வரவும் முடியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறது எனக்கு!" என்றார் சர்மா.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அனாதைப் பையன் சாம்பசிவம் அங்கே வந்தான்.

"இந்தப் பையன் யார் தெரியுமா, உனக்கு?" என்று மாப்பிள்ளையிடம் கேட்டார் சர்மா.

"தெரியவில்லையே?" என்று இழுத்தார் ராமநாதன்.

"உனக்கொரு சமையற்கார அம்மாள் தேவையென்று எழுதியிருந்தாயே, ஏழெட்டு வருஷத்துக்கு முந்தி, ஞாபகம் இருக்கிறதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/28&oldid=1321017" இலிருந்து மீள்விக்கப்பட்டது