பக்கம்:வழிப்போக்கன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

“ஆமாம், அன்னபூரணி என்று ஓர் அம்மாளை அனுப்பியிருந்தீர்கள். அந்த அம்மாள் இப்போது டில்லியில் வேறொருவர் வீட்டில் வேலைசெய்து கொண்டிருக்கிறாள்.”

“தெரியும், எனக்கு. அவளுடைய மகன்தான் இவன். பாவம் பரம ஏழை அந்த அம்மாள். எட்டு வருஷங்களுக்கு முன் இந்தப் பையனைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தாள்; தனக்கும் ஒரு வழி காட்டவேண்டும் என்றாள். இவனைத் தீனபந்து ஆசிரமத்தில் சேர்த்துவிட்டேன். ஒரு வருஷம்கூடத் தவறாமல் பாஸ் செய்து, இப்போது, பத்தாவது வகுப்பை முடித்திருக்கிறான். ரொம்ப கெட்டிக்காரப் பையன். படிப்பில் ரொம்ப அக்கறையாயிருக்கிறான்.மேற்கொண்டு படிக்க வேண்டுமாம், இவனுக்கு!” என்றார் சர்மா.

“அன்னபூரணியின் மகன் இவன்? பேஷ்!” என்றார் ராமநாதன். ‘பேஷ்!’ என்று கூறினீரே தவிர, ‘மனம் கறுப்பாயிருக்கிறானே!’ என்று எண்ணிற்று.

“சரிடா, அடுத்த வாரம் வந்து பார்!” என்று சொல்லி அனுப்பினார் சர்மா.

அந்தப் பையன் போனபிறகு, இவனை உனக்குப் பிடிக்கிறதா என்று கேட்டார் அவர் தம் மாப்பிள்ளையிடம்.

“ரொம்பக் கறுப்பாயிருக்கிறானே...!” என்று இழுத்தார் ராமநாதன்.

“இவனுடைய ஜாதகம் என்னிடம் இருக்கிறது. அடக்கமான பையன்; ஆயுசும் கெட்டியாக இருக்கிறது. புருஷனுக்கு நிறமா முக்கியம்? குணம்தான் முக்கியம். இவனையே சகுந்தலாவுக்குப் பிணைத்து விடலாமா என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை நான். இப்படி ஒரு பையன் இருக்கிறான் என்று சொல்லி வைத்தேன் அவ்வளவுதான். கங்காதரய்யரிடம் இருந்து சுந்தரத்தின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த பிறகே வேறு யோசனை!” என்றார் சர்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/29&oldid=1322772" இலிருந்து மீள்விக்கப்பட்டது