பக்கம்:வழிப்போக்கன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

னாள். தாய்க் கண் பொல்லாதது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய், ‘பரபர’வென்று உள்ளே சென்று ஆரத்தி கரைத்து வந்தாள்.

திருஷ்டி சுற்றிக் கொட்டிய பார்வதி, “வாடி அம்மா, வா!” என்று அந்த ஆரத்தியிலேயே கையை நனைத்து அந்தப் பெண்ணின் நெற்றியில் பொட்டிட்டு அவளைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

சகுந்தலா சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள். அப்போது அவள் கன்னங்களில் சுழித்த குழியைச் சுந்தரம் கவனிக்கத் தவறவில்லை.

“இது சொந்த வீடு. இங்கே சர்மாவின் கட்டுப்பாடு இருக்காது. சகுந்தலாவுடன் தாராளமாக பழகலாம்!” என்று எண்ணிக் கொண்டான் அவன்.

அன்று முழுதும் தாரை தப்பட்டை வாத்தியங்களின் அமர்க்களத்தில் ஊரே செவிடாகியிருந்தது. மாரியம்மன் கிரகம் ஊர்வலமாக வந்துவிட்டுப் போன பிறகுதான் அந்த ஓசை கொஞ்சம் அடங்கிற்று.

திருவிழாவை முன்னிட்டு இரவு தெருக்கூத்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“மயில் ராவணன் சரித்திரம். ரொம்ப நன்றாக நடிப்பார்கள் கூத்தாடிகள். அவசியம் நீங்கள் பார்க்க வேண்டும்” என்று சர்மாவை வற்புறுத்தினார் கங்காதரய்யர்.

“ஆகட்டுமே, பார்க்கலாம்,” என்றார் சர்மா. சகுந்த லாவை அழைத்து, “நீயும் கூத்துப் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார்.

“நான் வருகிறேன்!” என்றாள் அவள் மகிழ்ச்சியுடன்.

அந்தப் பெண் கிராமத்து ஜனங்களுக்கு மத்தியிலே புழுதியில் உட்கார்ந்து கூத்துப் பார்ப்பதில் கங்காதரய்யருக்குச் சம்மதமில்லை. எனவே, “அவள் எதற்கு? வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும்,” என்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/31&oldid=1322778" இலிருந்து மீள்விக்கப்பட்டது