பக்கம்:வழிப்போக்கன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

“அதுவும் சரிதான்; மாமிக்குத் துணையாக இருப்பாள்!” என்றார் சர்மா.

“என்னடா, நீ வரப்போகிறயா கூத்துக்கு?” என்று சுந்தரத்தைப் பார்த்துக் கேட்டார் கங்காதரய்யர்.

“நான் வரவில்லை; நிறையப் பார்த்திருக்கிறேன். மயில் ராவணன் கதைதானே?” என்றான் சுந்தர் சுவாரசியமின்றி.

சாப்பிட்டு முடிந்ததும் சர்மாவும் கங்காதரய்யரும் திறந்த வெளியில் பாயைப் பிரித்துப் போட்டு உட்கார்ந்த வண்ணம் பேசிக்கொண்டிருந்தனர்.

“வெற்றிலை போட்டுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் கங்காதரய்யர்.

“அந்தப் பழக்கம் கிடையாது எனக்கு; ஆனாலும் கொண்டுவரச் சொல்லுங்கள். இன்றைக்குப் போட்டுக் கொள்கிறேன்!” என்றார் சர்மா.

“சுந்தர்!” என்று குரல் கொடுத்தார் கங்காதரய்யர். வீட்டுக்குள் சகுந்தலாவையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டபடி, அவளிடம் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன். தந்தை கூப்பிட்டதும் அவன் எரிச்சலுடன் காலைத் தரையில் உதைத்தபடியே வெளியே வந்து, “என்னப்பா, கூப்பிட்டீர்களா?” என்று கேட்டான்.

“ஆமாண்டா, உள்ளே போய் வெற்றிலைப் பாக்குத் தட்டை எடுத்து வா!” என்றார் கங்காதரய்யர்; அவன் உள்ளே சென்றான்.

“சுந்தருக்கு இப்போது என்ன வயசாகிறது?” என்று பேச்சுக்கிடையே கேட்டு வைத்தார் சர்மா.

நள வருஷம் பிறந்தான்; வரும் ஆனியுடன் பதினெட்டு நிரம்பப்போகிறது என்றார் கங்காதரய்யர்.

“மூல நட்சத்திரம் என்று சொன்னதாக ஞாபகம்” என்றார் சர்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/32&oldid=1322792" இலிருந்து மீள்விக்கப்பட்டது