பக்கம்:வழிப்போக்கன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

“ஆமாம்; ‘ஆண்மூலம் அரசாளும்’ என்பார்கள். இவனே இப்போதுதான் ஐந்தாவது பாரம் படிக்கிறான். எந்தக் காலத்தில் அரசாளப் போகிறானோ” என்று குறைப்பட்டுக் கொண்டார் கங்காதரய்யர்.

“படிப்பு வேறு. வாழ்க்கை வேறு. நன்றாகப் படித்தவர்கள் எல்லாம் சீராக வாழ்ந்துவிடுவதில்லை; சீராக வாழ்பவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்களும் இல்லை...சுந்தரத்தின் ஜாதகம் இருக்கிறதா? அதை நான் பார்க்க வேண்டும்” என்றார் சர்மா.

“இருக்கிறதே, இதோ கொண்டு வருகிறேன்!” என்று உள்ளே போய் ஜாதகத்தை எடுத்து வந்து சர்மாவிடம் கொடுத்தார் கங்காதரய்யர்.

அதை கையில் வாங்கிக் கொண்ட சர்மா வெகு நேரம் வரை அதையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு விரல்களை மடக்கி, உதடுகளை அசைத்து, மனக்கணக்குப் போட்டுப் பார்த்தார். கடைசியாக, “சரிதான்; இப்போது சனி தசை நடக்கிறது!” என்றார்.

“சனி தசை இன்னும் எத்தனை வருஷம்?” என்று கேட்டார் கங்காதரய்யர்.

“இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது; இன்னும் ஏழரை வருஷத்துக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். அப்புறம் சந்திர தசையில் நன்றாயிருக்கும். அதையெல்லாம் நன்றாகக் கவனித்துப் பார்த்துத்தான் சொல்ல முடியும். இந்த ஜாதகத்தை நான் ஆற்காட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன். இது என்னிடமே இருக்கட்டும்” என்றார்.

“எடுத்துக்கொண்டு போங்களேன்!” என்றார் கங்காதரய்யர்.

இந்தச் சமயத்தில், “கூத்து ஆரம்பிச்சுட்டாங்க; மணியக்காரர் உங்களை இட்டாரச் சொன்னாரு!” என்று ஊர்த் தலையாரி வந்து அழைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/33&oldid=1322795" இலிருந்து மீள்விக்கப்பட்டது