பக்கம்:வழிப்போக்கன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

“சரி, புறப்படுவோமா?” சர்மாவைப் பார்த்துக் கேட்டார் கங்காதரய்யர்.

சர்மா உள்ளே போய் ஜாதகத்தைப் பத்திரப்படுத்தி விட்டுவந்து, சகுந்தலாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். ஆயினும், அவருக்கு மனதில் நிம்மதி இல்லை. சகுந்தலாவும் சுந்தரும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். ஆற்காட்டில் தம் வீட்டு மாடியில் கண்ட காட்சி சர்மாவின் நினைவுக்கு வந்துவிட்டது. எனினும், எதையும் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள முடியாதவராகக் கங்காதரய்யருடன் புறப்பட்டார்.

அவருடைய உள்ளத்தை நன்கு அறிந்திருந்த சுந்தர், நல்ல பிள்ளை போல் தான் படுக்கையைக் கொண்டு வந்து வாசல் திண்ணையில் போட்டுக் கொண்டான். அவன் திண்ணையில் வந்து படுப்பதைக் கண்டபோதுதான் சர்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

“நாங்க போயிட்டு வரோம்டா! வீட்டை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ; உன் அம்மா தூாங்குறா!” என்று கங்காதரய்யர் தன் மகனை எச்சரித்து விட்டுக் கிளம்பினார்.

“போயிட்டு வாங்கப்பா, நர்ன் பார்த்துக்கறேன்!” சுந்தர் உற்சாகத்துடன் கூறினான்.

சற்று நேரத்துக்கெல்லாம் உள் கதவைத் தாளிட்டுக் கொள்வதற்காக சகுந்தலா வாசலுக்கு வந்தாள்.

“கதவைத் தாளிடாதே, எனக்குத் தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்க உள்ளே வரவேண்டியிருக்கும்!” என்றான். சுந்தர்.

“உக்கும்...எடுக்கும் தாகம்!” என்று சொல்லிவிட்டுக் கதவைத் தாளிடாமலேயே உள்ளே போனாள் அவள்.

“அம்மா தூங்கியாச்சா?” என்று கேட்டான் சுந்தர்.

"இல்லை!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/34&oldid=1310267" இலிருந்து மீள்விக்கப்பட்டது