பக்கம்:வழிப்போக்கன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

“நீ கூடத்திலே படுத்துக்கொள்; முற்றத்தின் வழியாய் நல்ல காற்று வரும்.”

“நான் எங்கேயாவது படுத்துக்கொள்கிறேன்; உனக்கென்ன?” என்றாள் சகுந்தலா.

“இது ஆற்காடு இல்லை, மாங்குடி!” என்றான் சுந்தர்.

“அதனாலே நீ என்னை அதிகாரம் செய்ய முடியாது!” என்றாள் சகுந்தலா.

“இரு, இரு; இன்னும் எத்தனை நாளைக்கு உன் பிகுவெல்லாம்? என் ஜாதகம் இப்போ யாரிடம் இருக்கு, தெரியுமா?”

“யாரிடம் இருந்தால் எனக்கென்ன?” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய்விட்டாள் அவள்.

‘சகுந்தலா பல திருடி! கதவைச் சாத்தாமலே போறாளே;’ என்று எண்ணித் தனக்குள் மகிழ்ந்து கொண்டான் சுந்தர். அவ்வாறு அவன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, சகுந்தலா மீண்டும் வாசலுக்கு வந்தாள். வந்தவள் ‘டக்’கென்று கூஜாவைக் கீழே வைத்து, “இது நிறையத் தண்ணீர் இருக்கிறது. தாகம் எடுக்கும்போது குடிக்கலாம்” என்று கூறிவிட்டு சட்டென உள்ளே மறைந்து, கதவை உட்பக்கம் தாளிட்டுக்கொண்டு விட்டாள்!

உள்ளே சென்ற சகுந்தலா கூடத்தில் பாயை எடுத்துப் போட்டுப் படுத்தாள். அவளுக்குத் துக்கமே பிடிக்கவில்லை. கதவைத்தான் தாளிட முடிந்ததே தவிர தன் உள்ளத்தை அவளால் தாளிட முடியவில்லை; சுந்தரையே நினைத்துக் கொண்டிருந்தாள். கூடத்தின் மற்றொரு புறத்தில் படுத்துக் கொண்டிருந்த பார்வதி அம்மாள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

திடீரென வானத்தில் சிம்மம் கர்ஜிப்பதுபோல் ஓர் இடி முழக்கம் கேட்டது. கோடை இடி! சகுந்தலா பயந்துபோய்ப் பார்வதி அம்மாளை எழுப்பினாள்.

என்ன சகுந்தலா? என்று கேட்டாள் பார்வதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/35&oldid=1322800" இலிருந்து மீள்விக்கப்பட்டது