பக்கம்:வழிப்போக்கன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

“இந்த விளக்கு ஏன் சகுந்தலா; இதைக் கொண்டுபோய் மறைவாக வைத்துவிடேன்!” என்றான் மெல்லிய குரலில்.

“ஐயோ நான் மாட்டேன்;எனக்குப்பயமாயிருக்கும்!” என்றாள் சகுந்தலா.

சுந்தர் அவளையே சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கட்டிலின் விளிம்பு வரை மெதுவாகப் புரண்டு சென்று, சிரித்தால் சுழிக்கும் அவள் கதுப்புக் கன்னத்தைக் கையால் எட்டிக் கிள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு. மெதுவாகப் புரண்டான், கயிற்றுக் கட்டிலானதால் ‘கர், கர்’ என்று சத்தமிட்டது.

‘இந்தக் கட்டில் போடும் கூச்சலில் அம்மா விழித்துக் கொண்டால்...?’

சுந்தருக்குப் பயம் தோன்றிவிட்டது.

‘இந்தப் பாழும் கட்டிலும் எனக்கு எதிராகச் சதி செய்கிறதே!’ என்று பல்லேக் கடித்துக் கொண்டான்.

அப்போது பலமாக காற்று அடிக்கவே, சிம்னி விளக்கு அணந்துவிட்டது. கூடம், முற்றம், தாழ்வாரம் எங்கும் ஒரே இருட்டு!

‘சகுந்தலா பயப்படவில்லையே! ஒரு வேளை தூங்கிப்போய் விட்டாளோ?’

மீண்டும் ஓர் இடிமுழக்கம்; அந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான் சுந்தரம். இப்போது எழுந்தால் கட்டிலின் ஓசை இடி ஒசையில் அமுங்கிப் போகும்; அம்மாவுக்கும் நான் எழுந்திருப்பது தெரியாது. மெல்ல எழுந்து போய், சகுந்தலாவை நெருங்கி...

சுந்தரத்தின் உள்ளம் ‘படபட’ வென்று அடித்துக் கொண்டது. அடுத்த இடி ஒசைக்காக அவன் காத்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/37&oldid=1309631" இலிருந்து மீள்விக்கப்பட்டது