பக்கம்:வழிப்போக்கன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

“ஏன் பயப்படறே? பயப்படாதே! உனக்கு நல்ல பர்சனாலிடி இருக்குது; போலீசிலே சேர்ந்துடு; ஹெட் கான்ஸ்டேபிளாக்கூட ஆவலாம், என்ன படிச்சிருக்கே நீ?”

“ஐந்தாவது பாரம்”

“அடேயப்பா அவ்வளவு படிப்பு அதிகம் இதுக்கு என்ன சொல்றே? சேர்ந்துக்கிறியா? இப்போ ஆள் எடுக்கிறாங்க அப்புறம் இந்தச் சான்ஸ் கெடைக்காது. சொல்லிட்டேன்!”

சுந்தருக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஒருகணம் போலீசில் சேர்ந்து விடலாமா என்று சபலம் தட்டியது.ஆனாலும் அடுத்த கணமே அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

“வீட்டிலே உள்ள பெரியவங்களைக் கேட்டுக்கொண்டு வந்து அப்புறம் சேருகிறேன்; இப்போது நான் போகிறேன்!” என்றான் சுந்தரம்.

“சரி, அப்புறம் உன் இஷ்டம். உன்னை இன்ஸ்பெக்டர் பார்த்தா அப்படியே கவ்விக்குவாரு!” என்றான் கான்ஸ்டேபிள்.

‘தப்பினேன், பிழைத்தேன்’ என்று வெளியே வந்தான் சுந்தரம்.

அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவனுக்கு வெகு நேரமாயிற்று.

“புறப்பட்ட வேளை சரியில்லை; நேரமும் ஆகிவிட்டது: அறைக்கே திரும்பிவிடுவது நல்லதென்று நடந்தான் சுந்தரம். வீட்டை அடைந்தபோது வாசலில் ராயர் உட்கார்ந்திருந்தார். சுந்தரைக் கண்டதும், “இந்த மாச வாடகையைத் தரீங்களா?” என்று அவர் கேட்டே விட்டார்.

“தருகிறேன்!” என்று கூறிவிட்டு மாடிப்படி ஏறிச் சென்ற சுந்தரம், தன் அறைக்குப் போய் உட்கார்ந்து யோசிக்கிலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/53&oldid=1322751" இலிருந்து மீள்விக்கப்பட்டது