பக்கம்:வழிப்போக்கன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

வாங்கிப் பார்த்தார். புருவத்தைச் சுளித்துக்கொண்டே, "ரொம்ப நல்லாயிருக்குதே!" என்றார்‌. அவர் ரசிக்கிற விதம் அப்படித்தான்.

"இண்டியன் இங்க்கும், டிராயிங் பேப்பரும் சரியில்லே!" இழுத்தான் சுந்தர்.

"அதெல்லாம் நானே வாங்கித் தரேன் உனக்கு, நீ எத்தனை படம் வேணும்னாலும் எழுது; கவலைப்படாதே!" என்று உற்சாகப்படுத்தினார் அவர்.

"உங்களை இன்னொரு விஷயம் கேட்கணும்னு..." "என்ன அது?" "உங்க ஆபீசிலேயே என்னை ஒரு ஆர்ட்டிஸ்ட்டா சேர்த்து கொண்டால்......”

"சேர்ந்துக்கயேன்! இப்பவே வேணும்னாலும் சேர்ந்துக்க!”

சுந்தருக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

"நிஜமாகத்தான் சொல்றீங்களா?”

"இதிலே என்ன விளையாட்டு? நிஜமாத்தான் சொல்றேன்; உன் மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் எனக்குத் தேவைதான்!"

"ஆரம்பத்திலே என்ன கொடுப்பீங்க?"

"அம்பதுதான் கொடுப்பேன்! போகப்போக உன் வேலையைப் பார்த்துக் கூட்டுவேன். நூறு, இருநூறுகூடக் கொடுப்பேன். எல்லாம் உன் திறமையிலே இருக்கு." "அம்பது ரூபாயா? அதிகம் சார்!"

"ரூபாயா! யார் சொன்னது ரூபாய்ன்னு? அம்பது பிரதி 'தமிழ் போதினி' கொடுப்பேன்னு சொன்னேன். ஒண்ணு நாலணாவாச்சே? மாசத்துக்கு இரண்டு முறை வருது நம்ம பத்திரிகை. ஆக, மாசம் நூறு பிரதி கிடைக்கும் உனக்கு. அந்த நூறையும் கொண்டுபோய்க் கடைகளிலே விற்றுக்கலாம். கடைக்காரன் கமிஷன் போக உன் கைக்கு எப்படியும் இருபது ரூபா 'நெட்' டாக் கெடைச்சுடும்" என்றார் முதலாளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/64&oldid=1313750" இலிருந்து மீள்விக்கப்பட்டது