பக்கம்:வழிப்போக்கன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


என்று திட்டம் போட்டு வைத்திருந்தவன், இப்போது அவளை நேரில் கண்டதும் தன் ஆசைகளையெல்லாம் அடக்கிக் கொண்டவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஆற்காட்டில் இருந்தபோது சகுந்தலாவின் இதயமும் சுந்தரைக் காணத் துடித்துக்கொண்டிருந்தது. இங்கே வந்த பிறகோ, பொய்க் கோபம் குறுக்கிட்டு, சுந்தருடன் பேசாமலே இருந்துவிட்டாள்.

பக்தர்கள் கோயிலுக்குச் செல்லுமுன் கடவுளைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க ஆசைப்படுகிறார்கள். கோயிலுக்குப் போன பிறகோ, ஆண்டவன் சந்நிதியில் போய் நின்றுகொண்டு, பக்தி மேலீட்டால் கண்களை மூடிக்கொண்டு விடுகிறார்கள். ஒருவர் சந்நிதியில் ஒருவர் நின்ற சுந்தரும் சகுந்தலாவும் பக்தர்களின் நிலையிலேதான் இருந்தார்கள்!

சற்று நேரத்துக்கெல்லாம் மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் முடிச்சுப் போடும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண்கள் கோஷ்டியில் சகுந்தலாவும் சேர்ந்து கொண்டாள்.

சுந்தர் அவளைக் கவனிக்காததுபோல் இருந்தான். எல்லாம் முடிந்து, பெண்ணும் பிள்ளையும் மனையை விட்டு எழுந்து, திசைக்கு ஒருவராகச் சென்றபோது அந்தப் பெண்கள் எல்லோரும் கை தட்டிச் சிரித்துவிட்டார்கள். காரணம், சுந்தரும் காமுவும் எதிர் எதிராகப் போக முடியாதபடி இருவரையும் முடிச்சுப் போட்டுப் பிணைத்து விட்டிருந்தாள் சகுந்தலா!

"என்னுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கவேண்டிய இவள் தப்பித்துக் கொண்டு, எனக்கும் காமுவுக்கும் முடிச்சுப் போடுகிறாளே?" என்று எண்ணிக் கொண்டான் சுந்தர்.

'இவள் வேறொருவனுக்குச் சொந்தமாகி விட்டபிறகு. நான் இன்னொருத்திக்கு உரிமையாகிவிட்ட பிறகு, இனி என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/69&oldid=1321939" இலிருந்து மீள்விக்கப்பட்டது