பக்கம்:வழிப்போக்கன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


"நினைக்கட்டும்; என்மீது உனக்கு என்ன கோபம் என்பதை சொன்னால்தான் விடுவேன்!"

"என் கலியாணத்துக்கு நீ ஏன் வரலே?"

"என்னை வரச்சொல்லி நீ லெட்டர் போடலையே!”

"தாத்தா போட்டிருப்பாரே?”

"நீ போட்டாயா?"

"எனக்கு உன் விலாசமே தெரியாதே! நான் எப்படிப் போடுவேன்?’’

"உன் தாத்தாகிட்டே என் விலாசம் இருக்குமே?”

"தாத்தாவிடம் இருந்தால் அது எனக்கு எப்படிக் கிடைக்கும்?"

"விலாசம் வேணும்னு எப்படியும் கிடைக்கும்...ம்...என்னை மறந்துட்டேன்னு சொல்லு!"

"சுந்தர், உன்னை நான் மறக்கவே மாட்டேன். அது இந்தப் பிறவியில் முடியாத காரியம்...இதென்ன, பார்த்தாயா?"

"என் சோப்புப் பெட்டி ஆற்காட்டில் நான் வைத்து விட்டு வந்தது. ஏன் அழறே, சகுந்தலா?...அழாதே! விதிப்படி தான் எதுவும் நடக்கும்......"

"சுந்தர்! எனக்கு வழி விடு; நான் போகிறேன்!" என்றாள் சகுந்தலா.

"ஏன் தடுமாடுகிறாய்? உன் உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது?" என்று கேட்டான் சுந்தரம்.

"எனக்கொன்றும் இல்லை; இது பாத்ரூம்; ஜாக்கிரதை, சறுக்கிவிடப் போகிறது!" என்று சிரித்துக்கொண்டே கூறி விட்டு ஓடிவிட்டாள் சகுந்தலா.

"பொல்லாத பெண்! இதுகூட ஆற்காட்டு வெந்நீர் அறை என்று நினைத்துக் கொண்டாளோ? என்று எண்ணியவனாய் முகம் கழுவத் தொடங்கினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/71&oldid=1320979" இலிருந்து மீள்விக்கப்பட்டது