பக்கம்:வழிப்போக்கன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சகுந்தலாவின் கூந்தலில் இருந்து வந்த தாழம்பூ வாசனையும் மல்லிகையின் மணமும் அவனுக்கு இன்ப வேதனையை அளித்தன.

இராணிப்பேட்டை சந்தைத் திடலிலிருந்து ஒலிபெருக்கி மூலம் வந்துகொண்டிருந்த குரல் வேறு யாருடையதும் அல்ல; மலேயா சோமசுந்தரத்தின் குரல்தான்.

“தமிள் மொளி இனிய மொளி. அதனைதான் பாரதியார் "யாமறிந்த மொளிகளிலே தமிள் மொளி போல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று பாடினார்...”

மலேயா சோமசுந்தரத்தைத் தவிர, தமிழ் மொழியை இவ்வளவு ‘அள’ காக வேறு யாரால் பேச முடியும்?

பணத்தைப் பாலாற்றங்கரையில் மறந்து வைத்துவிட்டு வந்த சுந்தரத்துக்கு, அந்தக் குரல் ஆண்டவனுடைய குரலாகவே தோன்றியது. பழைய நிகழ்ச்சிகளின் எண்ணச் சுழலிலிருந்து விடுபட்ட அவன் உள்ளத்தில் இப்போது ஒரே எண்ணம்தான் குடிகொண்டிருந்தது.

கூட்டத்தை முண்டி அடித்துக்கொண்டு, மேடையருகே போய் நண்பனின் கண்ணில் படும்படியாக நின்றுகொண்டான் சுந்தரம். இவனைக் கண்டதுமே சோமசுந்தரம் புன்முறுவல் பூத்தான்.

சோமசுந்தரம் தன்னைக் கவனிப்பானா? கவனித்தாலும் பேசுவானா? என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு இது சற்று வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

கூட்டம் முடிந்ததுதான் தாமதம். சோமசுந்தரம் ஆவலோடு சுந்தரை அருகில் அழைத்து, “எப்போ வந்தீங்க? இங்கே எங்கே வந்தீங்க?” என்று கேட்டான்.

“கிராமத்திலேருந்து வரேன்...ஒலிபெருக்கியிலே உங்க குரல் கேட்டுது...”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/72&oldid=1322770" இலிருந்து மீள்விக்கப்பட்டது