பக்கம்:வழிப்போக்கன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"மெட்ராசுக்குத்தானே? என்னோடேயே வந்துடுங்களேன். கார் போகுது!"

"ஆகட்டும்” என்றான் சுந்தரம்.

வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பனிடம் எப்படி முதன் முதலில் பேசுவது? தன் நிலைமையை அவனிடம் எப்படி எடுத்துச் சொல்வது? என்று திகைத்துக் கொண்டிருந்த போது, நண்பனாகவே காரில் வரும்படி அழைத்ததும் சுந்தரத்துக்குப் பாதிக்கவலை தீர்ந்து போயிற்று.

கூட்டம் முடிந்ததும் சுந்தரையும் அழைத்துக்கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு, காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டான் மலேயா சோமு. காரில் மவுனமாக உட்கார்ந்திருந்த சுந்தர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான்.

"என்ன சுந்தர், என்ன யோசிக்கிறீங்க? எதையோ பறி கொடுத்துட்ட மாதிரி உட்கார்ந்து இருக்கீங்களே?"

"ஆமாம்; பதினைந்து ரூபாயைப் பாலாற்றங்கரையில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். இங்கே வந்த பிறகு தான் நினைவுக்கு வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் ஒலிபெருக்கியில் உங்கள் குரலைக் கேட்டேன்" என்றான் சுந்தரம்.

"பதினைந்து ரூபாய்க்கா இப்படி கவலைப்படறீங்க? போனாபோகுது; உங்களைப் போன்ற ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு பதினைந்து ரூபாய் ஒரு பெரிசா? இப்படியும் அப்படியும் இரண்டு கோடுகளைப் போட்டால் படமாயிடுது!"

"படமாயிட்டாப் போதுமா? பணமாக வேண்டாமா?"

"படத்துக்கும் பணத்துக்கும் ஒரு எளுத்துத்தானே வித்தியாசம்? எளுத்துக்கு" "அடுத்த எளுத்து 'ண' தானே?"

"பணம் சம்பாதிப்பது இவ்வளவு சுருக்கத்திலா இருக்கிறது?" என்று வியப்புடன் கேட்டான் சுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/73&oldid=1321991" இலிருந்து மீள்விக்கப்பட்டது