பக்கம்:வழிப்போக்கன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

"வள்ளுவர், இளங்கோ, கம்பன்--இப்படி எத்தனை ஆசிரியருங்க இல்லெ?"

"அவங்களெல்லாம் உயிரோடு இல்லையே?"

"அதனாலேதான் அவங்களைப் புடிச்சிக்கிட்டேன். செத்துப்போன ஆசிரியர்கள் எளுதினதைப் புத்தகமாப் போட்டால் பணம் கொடுக்க வேண்டாம், பாருங்க...ஆனா உங்களுக்குத் தரேன்!"

"உயிரோடு இருக்கிற ஆசிரியர் புத்தகத்தை வெளியிட்டு, அவங்களுக்குப் பணம் கொடுக்காமல் சாகடிக்கிறதை விட இது மேல்தான்!"

"நான் அப்படிச் செய்ய மாட்டேன்!"

"எவ்வளவு பணம் கொடுப்பீங்க?"

"ஒரு அட்டைக்குப் பத்து ரூபா கொடுப்பேன்; சேர்ந்தாப் போல ஆறு புத்தகங்களைப் போடப் போகிறேன். ஆறுக்கும் நீங்களே படம் போட்டுக் கொடுங்க. அறுபது ரூபா கொடுத்துடறேன்...இந்தாங்க , அட்வான்ஸ் பத்து ரூபா...நீங்க எங்கே இருக்கீங்க?"

"நல்ல தம்பித் தெருவிலே!"

"ரொம்பக் கிட்டத்திலேதான். சவுகரியமாகப் போச்சு, ஒரு மாசத்துக்குள்ளே எளுதி முடிச்சுடுவீங்களா?”

"முடிச்சுடறேன்!”

சொன்னபடி இருபதே நாட்களில் ஆறு படங்களையும் எழுதிக் கொண்டு போனான் சுந்தரம்.

அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு 'அபாரம்!' என்று புகழ்ந்தான் மலேயா சோமு. அப்படிப் புகழ்ந்த உடனே பணம் கேட்க மனம் வரவில்லை சுந்தரத்துக்கு. பேசாமல் எழுந்து போய்விட்டான். அப்புறம் இரண்டு மாதம் பணத்துக்காக அலைந்தான். பணம் கொடுக்கும் விஷயத்தில் 'தமிழ் போதினி' முதலாளியையே மிஞ்சி விட்டான் மலேயா சோமு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/78&oldid=1305078" இலிருந்து மீள்விக்கப்பட்டது