பக்கம்:வழிப்போக்கன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

படுக்கையருகில் வந்து அவன் காதோடு ரகசியமாகச் சொன்னான்: சாமி! “பத்தாயிரம் வெச்சிருக்கேன். அதை நீங்களே எடுத்துக்குங்க. சத்தியமாகச் சொல்றேன் சாமி, சந்தேகப் படாதிங்க...”

“சுந்தரம், இன்று உங்களுக்கு விடுதலை! ஜெயிலர் அழைத்துவரச் சொன்னார்” என்று கூப்பிட்டார் வார்டர்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எம். ஏ. பி. எல்லின் கண்கள் கலங்கிவிட்டன. “சுந்தரம்! உங்களைப் பிரிவதற்கே கஷ்டமாயிருக்கிறது. ஆனாலும் பிரியவேண்டியிருக்கிறது” என்று கூறியபோது சிறு குழந்தை போல் அழுதேவிட்டார்.

“ஸாமி; ஜெயில்லேருந்து போனதும் என்னை மறந்து விடுவியா?” என்று கேட்டான் குறவன்.

“மறக்க மாட்டேம்பா! உனக்கு என்மீது நம்பிக்கையில்லையா?” என்று கேட்டான் சுந்தரம்.

“அதுக்கில்லே சாமி! ஜெயில் சிநேகிதம், ரயில் சிநேகிதம்பாங்களே...!”

“யாரை மறந்தாலும் உன்னே நான் மறக்க முடியுமா?” என்றான் சுந்தரம்.

சுந்தரம் கண் கலங்கியபடியே அவர்களிடம் விடைபெற்று கொண்டான். பத்தரைமாத காலம் அவர்களிடம் அன்போடு, பாசத்தோடு, வாஞ்சையோடு பழகிவிட்ட பிறகு அவர்களைப் பிரிந்து செல்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்லவே!

சிறைச்சாலைக்குள் முதன் முதல் புகும்போது அவனுக்கு ஏதோ ஒரு புதிய உலகத்துக்குள் புகுவது போலிருந்தது. இப்போது அவன் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே காலெடுத்து வைத்ததும், அந்தப் புதிய உலகம் அவனுக்காக வெளியே காத்திருப்பதுபோல் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/98&oldid=1322842" இலிருந்து மீள்விக்கப்பட்டது