பக்கம்:வழுக்கு நிலம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 99 "சாப்பிடுகிறேன்' என்று சொல்லிப் பேசாமல் அடுக்களை நோக்கி நடந்தாள். இலையில் போட்ட கறி இன்னதென்று கூடப் பாராமல் ஏதோ கைபோன வழியில் உணவு அருந்தி இரண்டு குவளை நீர் குடித்து எழுந்தாள். அப்போதுதான் தெருவில் ஒரு பிச்சைக்காரன் வந்து நின்றான். கையில் தடியூன்றி நின்றான். வயிறு கொஞ்சம் பெருத்து இருந்தது. கைகால்கள் மெலிந்து சோம்பிக் கிடந்தன. கிழிந்த கந்தல் அவன் உடலை மறைக்க மறுத்து விட்டது. உலராத வியர்வை அவன் உடலை நனைத்துக் கொண்டிருந்தது. வெயிலில் வந்து நின்றவன் அழுக்குப் படிந்த மேல் துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். உள்ளேயிருந்து அண்ணி தட்டில் பாதியளவு சோறு கொண்டு வந்து போட்டதும் அவன் குறுகிய பார்வை விரிவடைந்தது. இதற்கு முன்னால் அதே பிச்சைக்காரன் அந்த வீட்டுக்குப் பலமுறை வந்து கேட்டது நினைவுக்கு வந்தது. அவன் வந்து நின்றதும் அடுக்களைக்குச் சென்று தான் உணவு கொண்டு வந்து போட்ட அந்தப் பழைய நினைவுகள் வர ஆரம்பித்தன. இப்போது அதே தட்டில் அவனுக்குச் சோறு போடத் தனக்கு உரிமை இல்லாத அந்த நிலைமை அவளுக்கு வருத்தம் தர ஆரம்பித்தது. "அவன் வயிற்றுப் பசிக்காக இரந்து உண்கிறான். நான் ஏன் என் வாழ்வுக்காக அவரிடம் இரந்து கேட்கக் கூடாது சே! மானம் இழந்து வாழ்வும் ஒரு வாழ்வா?” "காதல், பிச்சை எடுத்துப் பெறுவது அல்ல. அன்பு இரந்து கேட்டுப் பெறுவது அல்ல. உரிமை அழுது பெறுவது அல்ல. ஒருவரின் இரக்கத்தால் நான் வாழவேண்டிய நிலைமை வருவதைவிட இறப்பதேமேல்” என்று எண்ணத் தொடங்கினாள். அவளுக்குப் பொழுது போவதே துன்பமாக இருந்தது. சாயுங்காலம் அண்ணனும் அண்ணியும் சினிமா பார்க்கப் புறப்பட்டபோது, "நீயும் வருகிறாயா?” என்று அண்ணன் கேட்ட கேள்வியில், "நீ வர வேண்டாம்” என்று சொல்லுவது தெளிவாகத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/101&oldid=897982" இலிருந்து மீள்விக்கப்பட்டது