பக்கம்:வழுக்கு நிலம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 103 "வீட்டை வேறு வைத்து விட்டாயா?" சரிதான். நாளைக்கு நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான். "கட்டினவர்களுக்கு ஒரு வீடு. கட்டாதவர்களுக்கு ஆயிரம் வீடு. இதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா?" என்று சொல்லிக்கொண்டே தன் சட்டையில் விழுந்திருந்த தூசைத் தட்ட ஆரம்பித்தான். "அப்போது. ஏலத்துக்கு நிச்சயம் கொண்டு வந்திடுவானோ?” "அப்படி அவன் கொண்டு வராவிட்டால் அவனுக்குப் பொறுமைசாலி என்ற பட்டம் கட்டாயம் கொடுக்கணும்." "அப்படித்தான் அவன் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால்கூட அவனை நம்பிப் பிழைக்கும் வக்கீல் சும்மா இருப்பானா? எரியும் கொள்ளியை ஏறவிட்டால் தானே அதில் அவன் குளிர்காய முடியும்?" "இந்த மாதிரி நிலைமை வருகிறவரையிலும் நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன். முதலிலே அவரை வந்து அழைத்துப் போகச் சொல்லிக் கடிதம் எழுது. அல்லது நீயாவது என்னைக் கொண்டு போய் பம்பாயில் விட்டுவிடு.” "அதுதான் நானும் யோசிக்கிறேன். பேசாமல் வீட்டை விற்றுவிட்டுக் கடன்காரர்களுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு நிம்மதியா, எங்காவது ஒரு அறை எடுத்துக் கொண்டு தங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். வேளா வேளைக்கு ஹோட்டலிலே அதிகாரமாகச் சாப்பிட்டு விட்டுக் காலம் தள்ளலாம் என்று இருக்கிறேன்.” கூடத்தில் உயரமான ஒர் இடத்தில் குருவிகள் இரண்டு கூடு ஒன்று கட்டியிருந்தன. வைக்கோலால் கட்டியிருந்த அச்சிறுகூடு பெருங்காற்று ஒன்று வீசிய போது கீழே வீழ்ந்து விட்டது. குருவிகளும் கிரீச்” என்று கத்திக்கொண்டு வெளியேறின. மீண்டும் பறந்துவந்து விழுந்த சிறகுகளை யெல்லாம் பொறுக்கிக் கொண்டு போய் வைத்தன. மீண்டும் பழைய கூடு நிலைபெற்றது. குருவிகள் இரண்டும் ஜோடியாக' உட்கார்ந்து கொண்டு கீழே சிவராமனைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. “எனக்கு இறக்கைகள் கொடுக்கவில்லையே! நான் என்ன செய்யமுடியும்?" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/105&oldid=897990" இலிருந்து மீள்விக்கப்பட்டது