பக்கம்:வழுக்கு நிலம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ரா. சீனிவாசன் "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ போய் அவளை அழைத்துக்கொண்டு வா. உள்ள நிலைமையை எடுத்துச் சொல். கடன் தொல்லையை எடுத்துச் சொல்லி இருக்க நிழலில்லாமல் வீடு பறிபோய் விடும் என்பதையும் எடுத்துச் சொல்லு. ஏதோ கேட்டுப்பார். கொடுப்பதை வாங்கிக் கொண்டு வா. கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடை. வந்ததைக்கொண்டு வாழ வழிசெய். எனக்கென்னவோ இங்கு இருக்கக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. இந்த வீடு இனிச் சீர்பெறும் என்ற நம்பிக்கையும் சிறிது கூட இல்லை. அவர் வாரந்தோறும் வரச் சொல்லிக் கடிதம் எழுதுகிறார். நான் இருக்கவே மாட்டேன்." "என்னமோ! சரி. இன்று நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதுகிறேன். ஐந்தாயிரமாவது கொடுத்தால் போதும் என்பதையும் விளக்கி எழுதுகிறேன். நிலைமை சரிப்பட்டால் அழைத்து வருகிறேன்" என்று சொல்லிய வண்ணம் எழுந்தான். மறுபடியும் தனக்குப் பழக்கமான சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். சிவகாமியும் புகைந்து கொண்டிருந்த அடுப்பை ஊத அடுக்களைக்குச் சென்றாள். அந்தச் சிட்டுக் குருவியின் சீரான வாழ்க்கை அவன் மனக் கண்முன் வந்து நின்றது. நான் மட்டும் ஏன் வாழ்க்கையைச் சீர் செய்யக் கூடாது என்று எண்ணத் தொடங்கினான். பணம் இல்லாமல், ஏன் பார்வதியை வைத்துக் கொண்டு குடித்தனம் செய்ய முடியாது என்று எண்ணினான். "சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை வேறு. மனிதரின் வாழ்க்கை அமைப்பு வேறு. அவை இயற்கை நியதிகளைத் தவிர வேறு செயற்கைத் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை. அவை எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் இடலாம். குஞ்சுகள் எத்தனை வேண்டு மானாலும் பொறிக்கலாம். வாழ்வதற்கு எந்த இடமும் வாய்ப்பு அளிக்கும். ஆனால் மனிதரின் வாழ்வு அத்தகையதல்ல. பணத்தின் சட்டதிட்டங்கள் மனிதரின் விருப்பப்படி வாழ விடுவதில்லை. சூழ்நிலைக்கு அஞ்சி அதற்குத் தகுந்தவாறு வாழ வேண்டியிருக்கிறது. பணம் வரும் என்று எதிர்பார்த்த இத்திருமணத்தில் தோல்வியடைவது என்றால் என் வாழ்க்கையே தோல்வி என்றுதானே பொருள். மணவாழ்வு என்றால்: எங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/106&oldid=897992" இலிருந்து மீள்விக்கப்பட்டது