பக்கம்:வழுக்கு நிலம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 "பாழாக்க நினைக்கவில்லை. இனிமேல் எனக்குத் தெரியாது. நீயும் உன் மகளும் எப்படியாவது போங்கள். பட்டணத்திலே படித்த மாப்பிள்ளைக்குக் கொடுத்தால் சீரு சிறப்புச் செய்யாவிட்டால் சும்மா இருப்பார்களா? அவன் பத்தாயிரம் கேட்பானே. எங்கே வச்சிருக்கீங்க?" "நீ ஒன்று. மூன்றுமுடி போட்டுவிட்டால் அப்புறம் எப்படியாவது ஆகுது. குறுக்கே குறுக்கே பேசாதே. நான் எப்படியாவது ஏற்பாடு செய்து விடுகிறேன்." இந்தப் பேச்சுகளெல்லாம் பார்வதியின் கவனத்துக்கு வந்தன. திருமணச் சந்தையிலே தான் விலை கூறப்பெற்ற வரலாறெல்லாம் அவள் கவனத்திற்கு வந்துகொண்டிருந்தன. கடிகாரத்தின் முள் டக் டக் என்று ஒலித்துக் கொண்டிருந்தது. 'கிரீச் என்ற ஒலியோடு ஒரு சுண்டெலி ஓடி மறையத் தொடங்கியது. இந்த இரண்டொலிகளைத் தவிர வேறு ஒலி யொன்றும் பார்வதிக்குக் கேட்கவில்லை. கடிகாரம் மணி பன்னிரண்டு அடித்தது. சிவராமனின் சீற்றம் கவனத்துக்கு வந்தது. "நாளைக்கு வீட்டைவிட்டுப் போ. போ, உன் தந்தையிடம் போய்ச் சேர். பத்தாயிரத்தோடு வந்து சேர். இல்லாவிட்டால் இந்த இடத்தில் உனக்கு இடமில்லை" என்று சொல்லிய அந்தச் சொற்கள் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அவளுக்கு மயக்கம் வருவது போன்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அந்த வீடே ஒரு சுற்றுச் சுற்றுவதைப் போன்றிருந்தது. அவள் பழகிய இடமெல்லாம் அவளை விட்டுப் பிரிய மறுப்பது போன்று இருந்தது. அவரும் தானும் மகிழ்ச்சியாகப் பழகிய அந்த அறையின் மூலை முடுக்கு களெல்லாம் கவனத்துக்கு வந்தன. "பாரு! என்னைக் கொஞ்சம் பாரு! என்ன இருந்தாலும் இவ்வளவு வெட்கம் கூடாது. நானும் படிக்கிறபோது எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பழகியதில்லை. அவர்களிடத்தில் இல்லாத ஒரு தனித்தன்மை இந்த வெட்கம்தான். அதுதான் உன் பெருமையை..." "பாரு! நம்மை இனி யாரும் பிரிக்கமுடியாது. நீ இந்த வீட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்து இந்த வீடே கலகலப்பாக இருக்கிறது, நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் தான் வெறிச்சென்று இருக்கும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/11&oldid=898000" இலிருந்து மீள்விக்கப்பட்டது