பக்கம்:வழுக்கு நிலம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ரா. சீனிவாசன் கூடத்தில் கூடு கட்டியிருந்த சிட்டுக் குருவிகள் கிரீச் கிரீச் என்று கத்தின. அவை இவர்கள் வாழ்க்கையைக் கண்டு சிரித்தனவா, படும் துன்பம்கண்டு அழுதனவா என்று தெரியவில்லை. சிவராமன் வழக்கமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் சாய்வு நாற்காலியின் சட்டம் உடைந்து சாய்ந்து கிடந்தது. கீழே போட்ட சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. நிழற் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் ஆணிகள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாய் இருந்தது. அந்த இடத்தில் அப்பொழுதுதான் ஒரு மூட்டுப் பூச்சி இருட்டான இடத்தைத் தேடிக்கொண்டிருந்தது. வெளிச்சத்தைக் கண்டு கூசுவது போல அதன் உடலில் சிறிது நடுக்கம் காணப்பட்டது. இவர்கள் வீட்டில் வேலை செய்துவந்த வேலைக்காரி ஒரு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். அம்மை வடு நிறைந்த அவள் முகத்தில் இந்தத் துன்ப வடுக்களும் இடம் பெற்றன. அந்த இரண்டு பெட்டிகளையும் எடுத்து வெளியேயிருந்த டாக்ஸியில் வைத்தாள். அவளிடத்தில் மட்டும், "போய் வருகிறேன்” என்று சொல்லி சிவகாமி விடை பெற்றாள். சிவராமன் ஒன்றும் சொல்லாமல் அவளிடத்தில் வட்ட வடிவமான எட்டணா ஒன்றை எடுத்துக் கொடுத்தான். வேண்டாம் என்று சொல்லி அவள் வாழ்க்கையில் முதல் தடவையாக மறுத்துவிட்டாள். "இந்த வீட்டைப் பார்த்துக்கொள்” என்று பழக்கமாகப் பிறக்கும் சொற்கள் சிவகாமியின் வாயில் வரவில்லை. டாக்ஸியில் இருவரும் ஏறி உட்கார்ந்தார்கள். சிவராமன் முதல் இடத்தில் உட்கார்ந்து கொண்டான். அமீனா, வக்கீல் கடன்காரர்கள் இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் இவர்கள் காரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிவகாமி தலை குனிந்தபடியே உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிவராமன் "வருகிறேன், நன்றி!” என்று கண்ணியமாக அங்கிருந்த வக்கீலிடம் சொல்லிவிட்டு விடை பெற்றான். டாக்ஸி புறப்பட்டது. பிறகு அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிச் சிவராமன் கவலை கொள்ளவில்லை. 18 பார்வதியைப் பற்றி எதையும் கேட்பதற்கு இப்பொழு தெல்லாம் அவள் தாயாருக்குத் தைரியம் வருவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/124&oldid=898034" இலிருந்து மீள்விக்கப்பட்டது