பக்கம்:வழுக்கு நிலம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் ( 147 வடிவத்தை உருவடிவமாகக் காண வேண்டும் என்ற ஆவலால் அவன் கண்கள் அவளைப் பார்த்தன. அவள் விழிகளும் அவன் பார்வையைச் சந்தித்தன. உண்மையில் தாராளமாகப் பழகிய சாரதாதானா என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றும்படி அவள் நாணத்தால் தலைகுனிந்து தன் வேலையில் ஈடுபட்டாள். அவ்வப்போது ஆபீஸ் பியூன் இவன் மேஜைமேல் இருந்த கட்டுகளை எடுத்து அவ்வப்போது மேனேஜர் அறைக்குக் கொண்டு செல்வதும் திருப்பிக் கொண்டு வருவதுமாகவும் இருந்தான். கூப்பிட்ட மணிக்கு உள்ளே போவதும் வருவதுமாக இருந்தான். சிவராமனைப் பார்த்த அவன் பார்வை சாராதாவையும் பார்த்து விட்டுத்தான் நீங்கியது. நாடகத்தின் இரண்டாவது மூன்றாவது தொடரும் காட்சிகளை அவன் மனம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. இடைவேளை விட்டது போல ஆயிற்று சிவராமன் லீவு எடுத்த 'ஏழு நாட்களும். கடிகாரத்தின் முள் ஒரே தன்மையாய் இயங்கிக் கொண்டு இருந்தது. காலை பகல் ஆயிற்று. பகல் மாலை யாயிற்று. இவனுடைய கண்கள் கடிகாரத்தின் முள்ளில் சென்றது. அது ஐந்து மணி அடிக்கும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். மறுபடியும் வெளி முற்றத்தில் வந்து நின்றான். அதற்கு முன்னால் ஈட்டிக்காரன் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். அரச மரத்தின் இலைகள் அலைந்து கொண்டிருந்தன. அதன் இலைகள் உதிராமல் இருந்தன. காற்று அரசமரத்தின் கிளைகளை அசைத்துக் கொண்டிருந்தது. அதன் இலைகள் கிலுகிலுப்பை போல ஒலி செய்தன. இலை தளிர் காலமாக இருந்ததால் இலைகள் தளிர்விட்டுக் கொண்டிருந்தன. மயிலின் தோகையில் இருக்கும் பளபளப்பு அந்த இலைகளில் காணப்பட்டது. முன்கண்ட இலைக் குப்பைக் காணப்படவில்லை. அந்த ஈட்டிக்காரன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. வாயில் வைத்த சிகரெட்டை அதன் நீளத்தைக் குறைத்து அதைத் துண்டு சிகரெட்டாகி அதைக் கிழே போட்டான். அதற்காகவே காத்திருந்தது போல் தெருவில் ஒரு சிறுவன் அதை அணையாமல் அதற்குப் புத்துயிர் ஊட்டி அதைப் பிடித்துக் கொண்டிருந்தான். கைக்குட்டையால் வாயைத் துடைத்துக்கொண்டு தான் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் போனான். அந்தக் கட்டுகளை அலமாரியில் எடுத்து வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/149&oldid=898087" இலிருந்து மீள்விக்கப்பட்டது