பக்கம்:வழுக்கு நிலம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ரா. சீனிவாசன் அதை அந்த வீட்டில் யாரும் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. அவன் தந்தை அசையாமல் முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். என்ன செய்வது என்று முடிவுக்கு வராமல் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். "பார்வதி கொஞ்சம் காப்பி போட்டுக் கொடேன்." மெல்லிய குரலில் அம்மாவின் ஆணை பிறந்தது. "போம்மா! அவளுக்குக் காப்பி போடு. அடுப்புப் பற்றவை” என்று அவர் பார்வதியை நோக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். பார்வதி அடுப்பங்கரைக்குச் சென்று அடுப்புப் பற்றவைக்கும் சிறு தொழிலில் ஈடுபட்டாள். மாணிக்கம் வீட்டைவிட்டு அந்த நேரத்தில் போவது பார்வதிக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. தனக்கு மாணிக்கம்தான் ஆறுதலாக இருப்பான் என்று எண்ணிய அந்த நினைவு எல்லாம் வெறும் கனவாக முடிந்ததே என்று அவள்மனம் வருந்த ஆரம்பித்தது. 'திக், திக் என்று அடுப்புப் பற்றி எரிந்தது. வறட்டி கொஞ்சம் ஈரமாக இருந்தது. மண்ணெண்ணெய் இருந்த வரையிலும் எரிந்தது. மறுபடியும் எண்ணெய் ஊற்றியதும் பற்றிக்கொண்டது. 'மளக் மளக்' என்று விறகு கட்டை வெடித்து எரிய ஆரம்பித்தது. "போய் வருகிறோம்" என்று இருவர் சார்பிலும், மாணிக்கம் பெட்டி யெல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்து சொன்னான். அந்த மாதம் தாய் வீட்டிற்குச் சென்ற போது எடுத்துக் கொடுத்த புதுப் புடைவையைக் கட்டிக் கொண்டிருந்தாள். ஒரம் இல்லாமல் முழுவதும் சிகப்பாக இருந்தது. வயலட் ஜாக்கெட் சிகப்புக்கு ஈடு செய்யாமல் இருந்தது. முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்க, சிடு சிடு என்று வைத்துக்கொண்டு யாரிடமும் பேசாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டாள் மீனாட்சி. மறுபடியும் அந்தத் திக்கையே பார்க்காமல் எருது நின்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். மாணிக்கமும் வண்டியின் பின் பக்கத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டான். பின் கம்பியை எடுத்து மாட்டினான். வண்டியும் கடக் என்ற ஒலியோடு ஆட்டம் கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/158&oldid=898110" இலிருந்து மீள்விக்கப்பட்டது