பக்கம்:வழுக்கு நிலம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 157 எதிர் வீட்டில் சில பெண்கள் நின்ற இடத்திலிருந்தே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்கள் இவ் வண்டி வரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர். நடவாத ஒன்று நடப்பது போல அவர்கள் அந்த வண்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். "இப்படிக் கூடவா இருப்பார்கள். மாமியார் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாள். அப்படியே விட்டுவிட்டுப் போகிறாளே. நாளைக்குத் திடீர் என்று எதுவாவது ஆனால்.” "ஆனால், அவளுக்கு என்ன?” "அவள் பேச்சைக் கேட்டு அவனும் நடக்கிறானே. படித்த பையன். சொந்த புத்தி இருக்கிறதா?” "இல்லே! இல்லே! மாமியாரும் இலேசு பட்டவள் அல்ல. அவள் செய்கிற கொடுமையைத் தாங்க மாட்டாமல் தான் அந்தப் பெண், பாவம்! தாய் வீட்டிற்குப் போகிறாள்." "ஆமாம். இன்னொரு வாழாவெட்டி ஒன்று வீட்டிலே உட்கார்ந்துகொண்டு இருக்கிறதே, அது பூனை மாதிரி கலகம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவளைப் போல் இருக்கும்." "என்ன இருந்தாலும் பணக்கார சம்மந்தம் வைத்துக் கொண்டால் இப்படித்தான், மருமகளுக்கு மாமியார் பயந்து தீர வேண்டும்." "மீனாட்சிக்கு என்ன தலைவிதி, இந்தக் குப்பைக் காட்டிலே வந்து குப்பை கொட்ட வேண்டுமென்று. அவர்கள் வீட்டு நாய் தின்கிற சாப்பாட்டை இங்கே நாலு பேர் சாப்பிடலாம்.” வண்டி சென்றுகொண்டிருந்தது. வானொலியில் சில சமயங்களில் முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தால், உடனுக்குடன் விமரிசனம் செய்வது போல இருந்தது இவர்கள் போகும் வண்டியைப் பார்த்துப் பேசியது. அந்த வண்டி நின்ற இடம் காலியாக இருந்தது. வண்டி சென்று மறையும்வரை தெருவில் பெண்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். புளிய மரத்தின் பக்கமாக வண்டி திரும்பியதும் அதன் உருவம் மறைந்தது. தெருவில் நின்றிருந்த பெண்களின் உருவமும் வாசலுக்குள் மறைந்தன. மறுபடியும் அந்தத் தெருவில் மந்தமான வாழ்வே இருந்தது. மந்தமான அந்தக் கிராம வாழ்வில் இந்நிகழ்ச்சிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/159&oldid=898111" இலிருந்து மீள்விக்கப்பட்டது