பக்கம்:வழுக்கு நிலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ரா. சீனிவாசன் அந்தச் சொற்கள் பார்வதிக்கு ஓரளவு ஆறுதல் கொடுத்தது. அவர் தெரிந்து சொன்னாரோ இல்லையோ நம் வீடு' என்று சொல்லிய அந்தச் சொற்கள் அவளுக்கு ஆறுதல் கொடுத்தது. தம் தமக்கையின் முன்னால் தன்னைக் காட்டிக் கொடுக்காமல் நடந்து கொண்ட கண்ணியத்தைக் கண்டு அவள் பெரிதும் ஆச்சரியம் அடைந்தாள். ஒன்றும் பேசாமல் அந்தக் குவளையை மேசை மேல் வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். "பார்வதி! மரியாதையாகச் சொல்கிறேன். அந்தக் காப்பியை எடுத்துக்கொண்டு போ. இங்கே வைக்காதே." அந்தக் காப்பி குவளையை எடுத்துக் கொண்டாள். பிறகு சமையல்கட்டுக்குப் போய்த் தன் கடமைகளில் மனம் செலுத்த முற்பட்டாள். வெளியே தெருவில், முள்ளங்கி முள்ளங்கி என்று கூவி விற்றுக்கொண்டு போன ஒரு குரலைக் கேட்டாள். அடுப்பங்கரையை விட்டு வெளியே வந்தாள். - சிவராமனின் தமக்கை தன் பெட்டியிலிருந்த சரிகை சில்க் புடவைகளை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். அவள் கணவன் எடுத்துக் கொடுத்த ஜார்ஜ்ஜட் புடவையை எடுத்து மடிப்புக் கலையாமல் அடுக்கி வைத்தாள். அவற்றைப் பூச்சி பொட்டு கெடுக்காமல் இருக்க ரசகர்ப்பூரங்களை அங்கங்கே போட்டு வைத்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டியிலிருந்த தன் கணவரோடு தான் பிடித்துக் கொண்டிருந்த போட்டோ புடவையின் கீழ் இருந்தது. அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் தான் நின்று கொண்டும் இருக்கும் அந்தக் காட்சியில் அப்படியே சிறிது நேரம் மெய்ம்மறந்து இருந்தாள். அவள் அணிந்திருந்த புடவையின் சரிகை நன்றாகப் படத்திலும் பளிச்சென்று தெரிவதைப் பார்த்தாள். அந்தப் புடவையைப் பற்றிக் கவனம் வரவே அந்தப் படத்தை அப்படியே பெடடியில் வைத்துவிட்டு அந்த மைசூர் சில்க் புடவையை எடுத்து மடிப்புக் கலையாமல் இருக்க அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். இதைக் கவனித்தும் கவனிக்காமலும் பார்வதி வெளியே கூடையில் இறக்கி வைத்த முள்ளங்கியின் விலையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். விவாதம் ஒருவிதமாக முடிவாகி அந்தக் கூடையை விட்டு முள்ளங்கிக் கற்றை இரண்டு வெளியேறி இவள் கைக்கு வந்தன, இவள் கையிலிருந்த காசு இரண்டனாவும் அவள் கையில் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/16&oldid=898114" இலிருந்து மீள்விக்கப்பட்டது