பக்கம்:வழுக்கு நிலம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 163 "இப்பொழுது அவர் எங்கே?" "அவர் ஆபீசுக்குப் போயிருக்கிறார். சாயுங்காலம் வருவார். வந்தால் அவரைக் கண்டித்து நல்ல வழியில் திருப்ப வேண்டியது உன் கடமை. அதற்காகத்தான் எங்களவர் உனக்குக் கடிதம் எழுதினார். இதெல்லாம் எப்படி விபரமாகக் கடிதம் எழுதமுடியும்? அதற்குத்தான் இந்த மாதிரி கடிதம் எழுத வேண்டியதாயிற்று." "அங்கே அம்மாவுக்கு உடம்பு செளகரியமில்லை. அதனால்தான் தங்க நேர்ந்து விட்டது" எனது உண்மை கலந்து நாகரிகமாகப் பேசினாள். "யாரோ ஒருத்தி சினிமா நடிகை போல் இருக்கிறாள். ஒரு நாள் சாயுங்காலம் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. இதற்குத் தானா வீடு விட்டது? வீடு விடும்பொழுதே நல்ல நடத்தையுள்ளவர் களுக்குத்தான் வீடு விடுவது என்றிருந்தோம். கேட்டதற்குத் திருமணம் ஆனது, உங்கள் விலாசம் எல்லாம் கூடச் சொன்னார். நம்பினோம். அதனால்தான் வீடு விட்டோம். இப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் இப்படிப் பட்டவர்களுக்கு வீடு விட்டிருக்கவே மாட்டோம். அவர் உங்களோடு குடித்தனம் செய்வதாய் இருந்தால் இங்கு இருக்கட்டும். நீங்கள் ஊருக்குப் போய் விடுவதாய் இருந்தால் அவர் இந்த வீட்டைக் காலி செய்து விடட்டும். மேலும், உங்களைப் போன்றவர்களின் நல்ல வாழ்வு பாழாய்விடுவது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்க வில்லை." பார்வதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாணிக்கம் சொல்லிய மோகினித் தெய்வம் இவளாய்த் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். அவள் அழகில் மயங்கிய அவர் இங்கு எப்படித் தன்னைத் தங்க விடுவார்? அவரைக் கண்டிக்கத்தான் உரிமை கிடையாது என்று அந்த நாட்களில் சொல்லி இருக்கிறாரே என்று எண்ணினாள். பேசாமல் வந்தவழி பார்த்துக்கொண்டு ஊருக்குப் போனாலும் அம்மாவையாவது பார்த்துக் கொள்ளலாம். இங்கே வந்து இருக்கும் நிம்மதியையும் இழக்க வேண்டியது தான். அவர்களுக்கு எப்படித் தெரியும்? என்னை எதற்காக அனுப்பி வைத்தார் என்று அவர்களிடம் விவரம் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. இந்த நிலைமையில் என்ன செய்வது! என்று சிந்தித்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/165&oldid=898126" இலிருந்து மீள்விக்கப்பட்டது