பக்கம்:வழுக்கு நிலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ( ரா. சீனிவாசன் இதைப்போலப் பலர் வந்து கேட்பது பார்வதியின் சமீப கால வாழ்வில் சாதாரணமாக இருந்தது. சிவராமனின் தமக்கை எழுந்து வெளியே வந்தாள். "என்னப்பா? என்ன வேண்டும்?" "என்ன வேண்டும்? இரண்டுமாதமாக இழுத்தடிக்கிறார். கோட்டுத்துணி வாங்கி இரண்டு மாதம் ஆகிறது. இந்த மாதமாவது பாக்கியைச் செலுத்துவார் என்று எங்கள் எசமானர் கேட்டுவரச் சொன்னார்." "தம்பி சாயுங்காலம் வரும், அப்பொழுது வா!" "எத்தனை சாயுங்காலம். எத்தனை காலைப்பொழுது" என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் சைக்கிள் ஏறி அந்த இடத்தை விட்டு நீங்கினான். அவன் போகும் வரை அவன் தமக்கை அங்கேயே நின்றாள். "எல்லாம் அம்மா செய்த கெட்ட பழக்கம்தான். படிக்கிற காலத்தில் கேட்கும்போதெல்லாம் பணம் செலவுக்குக் கொடுத்ததனால் வரவுக்கு மீறிச் செலவு செய்கிறான்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வீட்டுக்குள் சென்றாள். பார்வதி இலையில் சோறு பரிமாறி வைத்திருந்தாள். "அக்கா! சாப்பிடுங்கள்!" என்று சொல்லி மணை ஒன்று போட்டுக் குவளையில் நீர்மொண்டு வைத்தாள். கை கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். "இந்த மாதிரி குடித்தனம் நடத்தினால் குடும்பம் குட்டிச்சுவராகத்தான் போகும்” என்று கசப்பான சொற்களைச் சொல்லிக்கொண்டே இலையில் இருந்த சோற்றைப் பிசையத் தொடங்கினாள். வீட்டின் பக்கத்தில் ஒரு குடிசை ஒன்று ஒலைகள் பாதியில்லாமல் வெறும் சுவராக இருந்த ஒன்று பார்வதியின் கவனத்துக்கு வந்தது. அந்தக் குடும்பத்தில் அவள் கணவன் கடன்காரனாக ஆகி அதே கவலையால் நோய் வாய்ப்பட்டுத் துன்பப்பட்டுக்கொண்டிருந்த காட்சி அவள் கவனத்திற்கு வந்தது. அவள் குழந்தையோடு பார்வதியினிடம் அடிக்கடி வந்து, "அம்மா குழந்தை அழுகிறது. கொஞ்சம் சோறு இருந்தால் ரசம் போட்டுக் கொடுங்கள்" என்று அடிக்கடி கேட்கும் அந்தப் பரிதாபகரமான காட்சி கவனத்துக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/20&oldid=898152" இலிருந்து மீள்விக்கப்பட்டது