பக்கம்:வழுக்கு நிலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 19 ஆனால் அவன் கடன்காரர்களைக் கண்டு அஞ்சி மெலிந்து விட்டான். தன் கணவன் அஞ்சாமல் அவர்களை அஞ்ச வைக்கும் திறமையால் உடல் மெலியாமல் இருக்கிறார் என்று அவள் அறிவு அவளுக்கு உண்மை உணர்த்தத் தொடங்கியது. "நான் என்னக்கா செய்ய முடியும்?" "எல்லாம் குடித்தனம் நடத்தும் பெண்களிடம்தான் இருக்கிறது. நீ அவனைக் கண்டித்திருக்க வேண்டும். வீண் செலவு செய்யாமல் தடுக்க வேண்டும். நாங்கள் அப்படிக் குடித்தனம் நடத்தினால் நகை நட்டு நிலம் வீடு இதெல்லாம் வாங்கி இருக்க முடியுமா? அவர் சம்பளம் வாங்கி அப்படியே சல்லிக் காசுகூட எடுக்காமல் கொடுத்து விடுகிறார். அதைத் திறமையாகச் சேர்த்து வைத்து ஒரு வீடு வாங்க முடிந்தது. இவன் வாங்குகிற சம்பளத்தை இவன் போக்கிலே செல்வு செய்ய விட்டு விடுகிறாய். இது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை” என்று சொல்லி வறுத்து வைத்திருந்த வாழைக்காய் வறுவலைப் பிடித்தமாக உண்ணத் தொடங்கினாள். அவள் சாப்பாட்டை முடித்ததும் பார்வதியும் தன் உணவைச் சீக்கிரம் முடிக்க முற்பட்டாள். சாப்பிடும்பொழுது சோறு புரைக்கை ஏறியது. "அம்மாதான் என்னைப்பற்றி நினைக்கப் போகிறார்கள். வேறு யார் நினைக்கப் போகிறார்கள்” என்று அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. பக்கத்திலிருந்த பானையிலிருந்து காய்ச்சி ஊற்றிய வெந்நீரைக் குடிக்க ஆரம்பித்தாள். கை கழுவிக்கொண்டு சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுப் பெருக்கித் தள்ளி விட்டுச் சட்டிப் பானைகளின் மீது தட்டுகள் போட்டு மூடி விட்டுக் கூடத்திற்கு வந்தாள். தழையை மெல்வது போல அவன் தமக்கை வெற்றிலை போட்டுக் கொண்டு புதிய வாரப்பத்திரிகை ஒன்று புரட்டிக் கொண்டிருந்தாள். வெள்ளை வெளேர் என்றிருந்த தலையணையில் பச்சை நூலால், 'நல்லிரவு' என்று போட்டிருந்தது. அந்தத் தலையணையைக் கொண்டு வந்து புதிய பாய் ஒன்றையும் கொண்டு வந்து, "படுத்துக் கொள்ளுங்கள். உண்ட இளைப்பு வண்டியில் வந்தவர்களுக்கு உண்டு” என்று சொல்லி அதனை விரித்துப் போட்டாள். சிகப்பு நீலம் போட்ட கோடுகள் அந்தப் பாயை அலங்கரித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/21&oldid=898155" இலிருந்து மீள்விக்கப்பட்டது