பக்கம்:வழுக்கு நிலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 9 23 காரணத்தால் அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்டாள். "இன்று சமையல் நன்றாக இருக்கிறது" என்ற சொற்கள் மட்டும் சற்றுத் தொலைவில் இருந்த பார்வதியின் காதுகளில் விழுந்தன. இந்தச் சொற்கள் முதலில் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்துத் தான் முதன் முதலில் சமையல் செய்து பரிமாறிய அந்த நாளில் கேட்டது கவனத்திற்கு வந்தது. விளக்கு வெளிச்சத்தில் சுவரில் ஒரு பல்லி ஒன்று அசையாமல் இருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் வாலை மட்டும் கொஞ்சநேரம் பொறுத்து அது அசைத்துக்கொண்டிருந்தது. அதற்கு எதிரில் மற்றொரு பல்லி எதிர்நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிவராமன் கைகழுவிக்கொள்ளச் சமையலறையிலிருந்து எழுந்தான். அவள் ஒருத்தி கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருக் கிறாள் என்பதையும் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. ஏதோ பார்வதியின் நிழல் மட்டும் அங்கு இருப்பது போன்ற உணர்ச்சியே அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவன் மறுபடியும் கண்ணாடியின்முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அரும்பணியில் ஈடுபட்டான். "பார்வதி சாப்பிட வா” என்று கூப்பிடும் குரல் கேட்டது. சரி! என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த பார்வதிக்குச் சாப்பிடும் தொழிலாவது கிடைத்ததே என்பதில் திருப்தி கொண்டவளைப் போல், "இதோ வந்து விட்டேன்" என்று வாய்விட்டுப் பேசக்கூடிய சந்தர்ப்பத்தை முழுவதும் பயன்படுத்திக் கொண்டது போலவே அந்தப் பதில் சிறிது உரத்த நிலைமையில் இருந்தது. பார்வதி உள்ளே போவதற்குள் அவன் தமக்கை வெளியே வந்து கொண்டிருந்தாள். அவளும் சாப்பிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து வருவதுபோல் இருந்தது வாயை முன்தானையால் துடைத்துக்கொண்டு வந்த காட்சி. "இருக்கிறதைப் போட்டுக்கொண்டு சாப்பிடு" என்று சொல்லிய வண்ணம், அவள் சமையலறையை விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/25&oldid=898163" இலிருந்து மீள்விக்கப்பட்டது