பக்கம்:வழுக்கு நிலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 25 போயிருப்பார் என்ற கேள்வி விடாமல் அவளுக்கு எழத் தொடங்கியது. "எனக்கு ஆங்கிலப் படமே பிடிக்காது. படம் என்றால் மொழி விளக்கமாகத் தெரியவேண்டும். நம் நாட்டுச் சில பண்பாடு அதில் பொருந்தி இருக்க வேண்டும். நமக்குப் புறம்பான நாகரிகத்தையோ பண்பாட்டையோ இலக்கியத்திலாவது சரி சினிமாப் படத்திலாவது சரி நாம் முழுவதும் அனுபவிக்க முடியாது" என்று அவர் முன்னெல் லாம் சொன்ன சொற்கள் அவள் கவனத்துக்கு வரத் தொடங்கின. வீட்டில் விளக்குகள் அணைக்கப் பெற்றன. கூடத்தில் எரிந்துகொண்டிருந்த அரிக்கேன் விளக்கு இறுதியில் அணைக்கப்பட்டது. அவன் தமக்கை கூடத்திலேயே படுத்துறங்கினாள். சிறிது நேரத்தில் தூக்கம் அவளைக் கவ்வியது என்பது அங்கே ஏற்பட்ட அமைதியால் தெரிந்தது. உள்ளறையில் எரிந்து கொண்டிருந்த படுக்கையறை விளக்கின் வத்தியைச் சிறுகப் பண்ணினாள். அதன் ஒளியில் நல்லிரவு' என்று எழுதிய தலையணை வெண்மையாகக் காட்சியளித்தது. அது ஏதோ வேதனை உண்டாக்குவது போல் இருந்தது. அந்த எழுத்துக்களை அவளால் உற்றுப் பார்க்க முடியவில்லை. சன்னலின் வழியாக வானை நோக்கி மின்னும் விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன என்று சிந்திப்பவளைப் போல் அவற்றை உற்று நோக்கினாள். தன் தனிமையைப் பார்த்து அவை சிரிப்பன போல அவளுக்குத் தோன்றியது. நிலா அழகாக இருந்தது. ஆனால் அவ்வழகு நிலா அவளுக்கு வேதனையையே கொடுத்தது. "பிரிந்தவரை வாட்டுவதேன் வெண்ணிலாவே" என்று எப்பொழுதோ எங்கேயோ படித்த பாட்டின் ஒர் அடி அவளுக்குக் கவனம் வர ஆரம்பித்தது. வானின் நிலவைவிட வையகத்தின் இருளே சூழ்ந்திருந்தால் எவ்வளவோ மேல் என்று அவள் எண்ணினாள். அப்பா பணம் கொடுக்கவில்லை என்றால் என்மீது வெறுப்புக் காட்டலாம். ஆனால் ஒவ்வொரு இரவும் ஏன் வீட்டில் தங்கக்கூடாது? அவர் எங்கே போயிருப்பார்? அவர் யாரோடு பழகலாம். ஏன் ஒருநாளைப் போல பலநாள் நேரங்கழித்து வீடு திரும்ப வேண்டும் என்று இன்ன பிற எண்ணங்கள் அவள் உள்ளத்தில் தோன்ற ஆரம்பித்தன. ஒருகால் எந்தப் பெண்ணோடாவது உறவு இருக்குமா? கேட்டால் அதைக் கேட்க எனக்கு உரிமை கிடையாது என்கிறார். அவர் நடத்தையில் தவறலாம்; என்னிடத்தில் அன்பு செலுத்தாமல் இருக்கலாம். ஆனால் அவர் நடத்தையைப் பற்றி நான் தெரிந்து கொள்வதற்குக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/27&oldid=898165" இலிருந்து மீள்விக்கப்பட்டது