பக்கம்:வழுக்கு நிலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 27 "ஏழு மணி வரையும் தூங்கினால் வீடு பாழாக வேண்டியதுதான்” என்று கனத்த குரலில் கண்டித்துக் கொண்டிருந்த சிவராமனின் தமக்கையாரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. "மூதேவி காலெடுத்து வைத்ததிலிருந்து எல்லாம் கஷ்டந்தான்" என்று சலிப்போடு சிவராமன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். "அவள் என்னடா செய்வாள். எல்லாம் நீ கொடுக்கிற உரிமைதான். பட்டிக்காட்டிலே காக்கை எழுவதற்கு முன்னால் எழுந்து நீர் தெளித்துக் கோலம் போட்டு வந்த பெண் இங்கே..." "கோலங் காட்டுகிறாள்." "ஆமாம். நான் இங்கே வந்து தங்காவிட்டால் அவள் என்ன கற்றுக் கொள்ள முடியும்? எல்லாம் நாம் கொடுக்கிற மரியாதையிலேதான் வீட்டுக்கு வருகிற மருமகள் நடந்து கொள்வாள். நான் என்னமோ வேண்டாம் என்று தான் தலைப்பாடாக அடித்துக்கொண்டேன். நீதான் அது நல்ல இடம்; இருக்கப்பட்ட குடும்பம் என்றெல்லாம் பேசி நீ கடைசியிலே தீவினையைத் தேடிக் கொண்டாய். அவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஜாதகம் சரியாக இல்லை என்று அவர் சொன்னால் நீ கேட்காமல் போய் விட்டாய். அவள் ஜாதக ராசிதான் உன் கையிலே வருகிற பணம் நிற்காது என்று நன்றாக அவரும் சொன்னாரே இல்லாவிட்டால் நம் அப்பா இருந்தபோது ஒரு கடன்காரன் நம்வீட்டு வாசற்படியிலே நிற்பானா? சோப்புப் பெட்டி ஸ்நோ வாசலைன் இந்த மாதிரிப் பொருள்கள்தாம் நிறைய அடுக்கி வைத்திருக்கிறாள். இதற்கெல்லாம் நீ செலவு செய்துவிட்டு இப்பொழுது கடன்காரர் முன்னால் கவலைப்படுகிறாய்.” "என்ன சாமி! எப்பொழுது வரச்சொல்லுகிறீர்?" என்று நயமான குரலில் இவன் எப்பொழுதோ காலங் குறிப்பிட்டது போலும் அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு கேட்பவன் போலும் அந்தப் பால்காரன் கேட்ட கேள்வி அமைந்தது. "சும்மா அடிக்கடி கேட்காதே. அடுத்த மாதம்” என்று கண்டிப்புக் கலந்த குரலில் சிவராமனின் பதில் வந்தது. “எத்தனை அடுத்த மாதமோ” என்று வெளியே வந்து முணுமுணுத்துக் கொண்ட ஒலி பார்வதியின் காதில் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/29&oldid=898168" இலிருந்து மீள்விக்கப்பட்டது