பக்கம்:வழுக்கு நிலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 35 களைப்பே தென்பட்டது. உணர்ச்சியற்ற மரமாகவாவது பிறக்கக் கூடாதா என்று எண்ணத்தொடங்கினாள். அதுகூட வெளிச்சத்தை நாடித்தான் வாழ்கிறது. கூடத்தில் மாட்டியிருந்த படங்களை யெல்லாம் உடைத்துப் போட்டு விடலாமா என்று கூட அவள் மனம் எண்ணத் தொடங்கியது. அப்படிப் பார்த்த படங்களையே பார்த்துக் கொண்டிருப்பது என்பதில் வெறுப்பு ஏற்பட்டது. ஏன் வீணாகப் படம் பிடித்து வைக்கிறார்கள் என்று ஆராயத் தொடங்கினாள். என்றோ திருமணம் நடந்தது. அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்து இப்பொழுது அவளுக்குச் சலித்துப் போய் விட்டது. இதேபோல எப்பொழுதுமா நிற்கவேண்டும். மனித உள்ளத்தில் எத்தனையோ மாறுதல்கள், வளர்ச்சிகள். உருவத்தில் எவ்வளவோ மாற்றங்கள். இந்தப் படங்கள் மட்டும் ஏன் மாறாமல் இருக்கின்றன. அவற்றை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நல்ல வெயிலில் நின்று அந்தச் குட்டையாவது அனுபவிக்கலாமா என்று அவள் எண்ணினாள். சே! பைத்தியக்காரி என்று மற்றவர்கள் நினைக்கக் கூடும். பைத்தியக்காரியின் நிலைமை எவ்வளவோ மேல். அவள் வாய்விட்டுச் சிரிக்கலாம்; ஒ வென்று அழலாம். அந்த உரிமை எனக்கு இருக்கிறதா? இல்லை, ஏன் உணர்வு என்பது எனக்கு இருக்க வேண்டும்? உணர்வுள்ள மனிதராகப் பிறந்த பிறகு உணர்வையெல்லாம் அடக்கி எப்படி வாழ முடியும்? இதைப் போன்ற எண்ணங்கள் பல வேகமாக அவள் மனத்தில் வந்து குவிந்துகொண்டிருந்தன. அவற்றை அடக்கி வைக்க முடியாத காரணத்தால் சன்னல் வழியாக நின்று வேடிக்கையாவது பார்க்கலாம் என்று எண்ணியது அவள் மனம். அவள் மனம்போன வழி கால்களும் பின் தொடர்ந்தன. தெருவிலும் சுறுசுறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் தெருவில் முள்ளங்கி விற்றிருந்த அந்தப் பெண்ணின் உருவம் மனதில் வர ஆரம்பித்தது. சுமை நிறைந்த உடை, அதைத் துரக்க முடியாமல் தூக்கிய அந்த நிலைமை; அவள் கழுத்தில் அதன் அடையாளமாக ஓடிய பச்சை நரம்பு, இறுதியில் எல்லாம் வயிற்றுக்குத் தான் என்று சொல்லிய அந்தச் சொற்கள் அவள் கவனத்துக்கு வந்தன. "எல்லாம் வயிற்றுக்குத்தான்" இல்லை என்று அவள் மனம் வாதாட ஆரம்பித்தது. எங்கள் வீட்டில் எனக்குச் சோறு இல்லையா? சோறுபோட மறுப்பார்களா? அதே போல அவருக்குச் சோற்றுக்கு வழியில்லாமலா பணம் கேட்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/37&oldid=898186" இலிருந்து மீள்விக்கப்பட்டது