பக்கம்:வழுக்கு நிலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ( ரா. சீனிவாசன் வைக்கிறான். என்ன செய்வது. குறைகள் நூறு இருக்கலாம். என்னைத் தவிர வேறு யார் அவனுக்கு ஆறுதலாக இருக்கப் போகிறார்கள். நானும் பம்பாய் போய்விட்டால் அங்கே மட்டும் மனம் சமாதானமாக வாழ முடியுமா..? இங்கே வந்து ஒன்றையும் கவனிக்காமல் இருந்திருந்தால் இவனைப் பற்றிச் சிந்தித்துத் துன்பப்பட வேண்டிஇருக்காது. அந்த ஆசாமியும். "ஆக்கிப்போட நீ இருக்கிறாய்" என்று சொல்வதற்கு இடம் இருந்திருக்காது. அவனும் துணிச்சலாக அவளை அனுப்பியிருக்க மாட்டான். எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம், எப்படியும் நான் போவதற்கில்லை" என்று அவள் உள்ளம் எண்ண ஆரம்பித்தது. சாயுங்காலம் பால்காரன் வந்து தெருவில் மாடு கட்டிக் கறக்கக் கன்றுக்குட்டியைப் பிரித்து வைத்தான். இளங்கன்று துள்ளிக் குதித்து ஒடிக்கொண்டிருந்தது. அது அவன் கையை விட்டு ஒட முயன்றது. அதைக் கெட்டியாகப் பிடிக்கா விட்டால் மருண்டு கட்டுக் கடங்காமல் எங்காவது போகும் வண்டியில் அகப்பட்டுக் கொள்ளும் போல் இருந்தது. தாயினிடமும் அக்கன்று செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு இருந்தது. அந்தப் பால்காரனின் நிலைமையைப் போல் தன்நிலை இருப்பதாக அவள் மனம் ஏனோ அவ்வாறு நினைக்க ஆரம்பித்தது. அந்தக் கடிதத்திற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். எதற்கும் தம்பி வரட்டும்; வந்தால் அவனையும் கலந்து எழுதலாம் என்ற கருத்தோடு வீட்டுக் கடமைகளில் கவனம் செலுத்தினாள். மாலை மணி ஏழு அடித்தது. இருள் மங்கியிருந்த நேரம். கூடத்தில் இருந்த படத்தின் முன்னால் சிறு விளக்கு ஒன்று ஏற்றிக் கொண்டிருந்தாள். அதன் வத்தியைக் கைவிரலால் சிறிது தள்ளிக்கொண்டிருந்தாள். "அக்கா! காப்பி போட்டிருக்கிறாயா?" போட்டிருந்த காப்பியைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் முகம் நிரம்பவும் சோர்வுற்றிருந்தது. தலைமயிரெல்லாம் சிதறிக் கிடந்தது. நடையிலிருந்த சாய்வு நாற்காலியை அவனே இழுத்துக் கூடத்தில் போட்டுக் கொண்டான். அதில் அவன் உடலைப் போட்டான் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவன் மனம் களைத்திருந்தது. அந்த உடலுக்கும் அவன் மனத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதிருந்ததைப் போன்றிருந்தது. கொண்டு வந்த காப்பியைச் சுவைத்துச் சாப்பிடாமல் அப்படியே வாங்கிக் குடித்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/50&oldid=898217" இலிருந்து மீள்விக்கப்பட்டது