பக்கம்:வழுக்கு நிலம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 65 மணி ஐந்தடித்தது. ஐந்து சம்மட்டிகளைக் கொண்டு தாக்கியது போன்று இருந்தது. ஆபீஸைவிட்டு வெளியே போக வேண்டுமே! போனால் அவனைச் சந்திக்க வேண்டுமே என்ற எண்ணமும் அதைத் தொடர்ந்து அச்சமும் அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தன. மேனேஜரின் கதவு தாளிடப்பட்டது. தலைமைக் குமாஸ்தா உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் கோட்டு மட்டும் இருந்தது. பழக்கமாக அவர் அதை அங்கே விட்டுவிட்டுச் செல்லும் பழக்கத்தில் அவர் அதை அங்கே விட்டுச் சென்றார் என்பது அவனுக்குத் தெரியும். அவர் போய்விட்டார் என்பதை அவரை விட்டுப் பிரிந்திருந்த கோட்டின் தனிமை எடுத்துக் காட்டிற்று. ஆங்கிலோ இந்தியமாதின் டக் டக் என்று நடந்து சென்ற ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆபீஸில் இருந்த குமாஸ்தாக்கள் அனைவரும் அறையை விட்டு வெளியே சென்றனர். சிவராமன் மட்டும் அப்பொழுதுதான் ஏதோ முக்கியமான வேலைகள் செய்பவன் போல் சில குறிப்பேடுகளைத் திறந்து அதைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். ஆபீஸ் பியூன் சன்னல் கதவுகளையெல்லாம் மூடத் தொடங்கினான். ஒனறு இரண்டு மட்டும் விட்டு வைத்தான். காற்றுப் போக்கிகளுக்குக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டான். அறையின் கதவுகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. அவன் பார்த்த பார்வைகள் வெளியே போ என்று சொல்லாமல் சொல்லுவதைப் போல இருந்தது. கடிகாரத்தின் இரண்டு கைகளும் தன்னிடத்திலிருந்தபடியே அவனை எழுப்பித் தள்ளுவன போல் அவனுக்குத் தோற்ற மளித்தன. சாரதாவும் அந்த இடத்தைவிட்டு எழுந்து விட்டாள் என்பதையும் அடங்கிவிட்ட டைப் இயந்திரத்தின் அமைதியிலிருந்து தெரிந்து கொண்டான். சிறிது நேரத்திற் கெல்லாம் கண்ணாடியிருந்த தனியறைக்குச்சென்று தலையெல்லாம் சரி செய்துகொண்டு வேலை செய்த அலுப்பே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவள் பக்கத்தில் வந்து நின்றதை அவன் சிறிது நேரம் கவனிக்கவில்லை. "ஏன் சார்! இன்னும் வெளியே போக மனம் வரவிலலையா?” - கேட்டது சாரதாவின் குரல்தான் என்பதை உணர்ந்து கொண்டான். "ஆமாம். உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். உங்களைப் போல....”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/67&oldid=898254" இலிருந்து மீள்விக்கப்பட்டது