பக்கம்:வழுக்கு நிலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 : ரா. சீனிவாசன் அதற்குமேல் அவன் ஒன்றும் தொடர்ந்து பேசாமல் நிறுத்தி விட்டான். "ஏன் நிறுத்திவிட்டீர்கள். தொடர்ந்து சொல்லி விடுங்கள். வேலை எளியது என்று சொல்லப் போகிறீர்கள். அவ்வளவு தானே." "இல்லை. வாழ்க்கை எளியது. கவலையற்ற வாழ்க்கை." என்று அவனையும் அறியாமல் மனத்திலிருந்த தொல்லை யையும் மறந்து காத்துக் கொண்டிருந்த கடன்காரனையும் மறந்து ஏதோ உள்ள எழுச்சியால் இந்தச் சொற்களைச் சொன்னான். உங்களுக்கு மட்டும் குழந்தையா குட்டியா! எழுந்திருங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குமேல் ஆபீசில் இருக்கக் கூடாது. இது முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் பள்ளிகூடத்துப் பையன் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டு வருவதைப் போல் குறிப்பேடுகளை வீட்டுக்கும் கொண்டு போகிறார்கள். எதிலும் ஒரு வரையறை வேண்டும், ஐந்தடித்தால் எழுந்துவிட வேண்டும்” என்று அவளும் பலநாள் பழகியவளைப் போல் முற்றுப் புள்ளியில்லாமல் பேசத் தொடங்கினாள். பேசுவது சாரதாதானா என்று அவனுக்கு ஐயம் தோன்ற ஆரம்பித்தது. தொழிலில் கண்ணுங் கருத்துங் கொண்டு யாரிடமும் பேசாமல் கோடு போட்டதைப் போலத் தன் கடமைகளை ஆற்றிவரும் சாரதாதானா இவ்வாறு பேசுவது என்று எண்ணத் தொடங்கினான். அவளையே அவனுக்கு வட்டிப் பணமாவது கட்ட ஏதாவது கடன் கேட்டு விடலாமா என்ற அற்ப யோசனை தோன்ற ஆரம்பித்தது. "நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன் மறுக்க மாட்டீர்களே!” இவ்வாறு பேசும்பொழுது சிவராமனும் சாரதாவும் தவிர வேறு யாரும் இல்லை என்பது அங்குச் சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறி சுற்றும் சிறு ஒலியைத் தவிர வேறு ஒசை இல்லாத காரணத்தால் தெரிந்தது. சட்டென்று சாரதாவின் முகம் சிவந்து விட்டது. உடம்பிலிருந்த இரத்த வோட்டம் சிறிது வேகமாக ஒடுவதைப் போல இருந்தது. நாணத்தின் எல்லை அவள் நாணித் தலை கவிழ்ந்த நிலையில் இருந்து தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/68&oldid=898256" இலிருந்து மீள்விக்கப்பட்டது