பக்கம்:வழுக்கு நிலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 1 வெளியில் காற்றும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு அடித்துக்கொண்டிருந்தது. வீட்டின் சுவர் களெல்லாம் சாரலால் நனைந்துகொண்டிருந்தன. சன்னல் கதவுகளெல்லாம் டபார் டபார் என்று அடிக்கடி அடித்துக் கொண்டிருந்தன. பார்வதி சன்னல் கதவுகளை ஒவ்வொன்றாக மூடினாள். மழைத்தண்ணிர் வெளியே சொட்டு சொட்டு' என்று விழுந்து கொண்டிருந்தது. அந்த நீர்த்துளிகளோடு இரண்டு கண்ணிர்த் துளிகளும் கீழே விழுந்து தெறித்தன. வெளியே கதவு தட்டும் ஒலி முதலில் கேட்கவில்லை. பிறகு சிறிது நேரத்தில், பார்வதி! பார்வதி!' என்று கூப்பிடும் குரல் கேட்டது. தம் கணவர்தாம் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட பார்வதி கையில் 'திக் திக் என்று எண்ணெய் அதிகமாக இருந்ததால் எரிந்து கூத்தாடிக்கொண்டி ருந்த ஹரிக்கேன் விளக்கைத் தாங்கியவண்ணம் கதவைத் திறந்தாள். சிவராமன் சட்டையெல்லாம் நனைந்திருந்தது. வரும் பொழுதே போட்டிருந்த சட்டையைக் கழற்றத் தொடங்கினான். உள்ளே இருந்து ஒரு கைத்துண்டு ஒன்று கொண்டு வந்து கொடுத்தாள். உடம்பெல்லாம் துடைத்துக்கொண்டு சட்டையை மாற்றிக் கொண்டான். தலையை மட்டும் சரியாகத் துடைக்காமல் அப்படியே கையால் தள்ளிக் கொண்டான். "என்ன, காப்பி போட்டிருக்கிறாயா?" "இதோ போடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டு அடுப்புப் பற்ற வைக்கச் சென்றாள். அடுப்பில் படுத்திருந்த கருப்புப்பூனையின் கண்கள் மினுமினுத்துக் கொண்டிருந்தன. சட்டென்றெழுந்து ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தன்னை எழுப்ப வந்ததை மிகவும் வெறுப்பதைப் போல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/7&oldid=898260" இலிருந்து மீள்விக்கப்பட்டது