பக்கம்:வழுக்கு நிலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 73 வேலை செய்யும் விவசாயப் பெண்கள் வாயில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு கலகல என்ற ஒலியோடு ஆரவாரமாக நடந்து சென்றனர். இடுப்புவரையில் துணியைச் சுற்றித் தலைப்பாகையை ஒன்றும் பாதியுமாகக் கட்டிக் கொண்டு சாலைஓர மரநிழலில் பொழுதுபோவதே ஒரு சிறந்த கலை என்ற தத்துவத்திற்கு விளக்கம் தருவது போல ஒரு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். வண்டியில் பூட்டியிருந்த பழுப்புநிற எருது எவ்வளவு வேகமாக ஒட்டினாலும் அது தன் சொந்த நடையில் நடந்து சென்றது. அதன் கொம்பில் சுற்றியிருந்த சதங்கை அந்த வண்டி செய்யும் தடதட என்ற ஒலிக்கு ஏற்றவாறு தாளம் போடுவது போல் இருந்தது. இடையிடையில் அவர்கள் பேசிக்கொண்டே வந்த பேச்சு அந்த வண்டியின் ஒலியோடு சேர்ந்து இயங்கியது. கூட்டுச் சாலைக்கு வண்டி வந்தது என்பது அங்கே ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த புளியமரங்களே சான்று பகரச் சொல்லி யிருந்தால் சொல்லியிருக்கும். வண்டியும் நின்றது. வழக்கமாக பஸ் நிற்குமிடத்தில் வண்டியிலிருந்து இம்மூவரும் இறங்கினர். அவர்களோடு ஏறிய ஒரு தோல் பெட்டியும் கைப்பையும் கீழே இறங்கின. ஓங்கி உயரமாக வளர்ந்திருந்த ஒரு புளிய மரத்தின் நிழலில் உட்கார்ந்தார்கள். அதன் கனத்த வேர்களே உட்காருவதற்கு ஒரு சிறு மணையைப்போல அமைந்திருந்தன. அதன் பக்கத்தில் பாழடைந்த கோவில் ஒன்று தன் பழைய வரலாற்றின் பழமையை எடுத்துச் சொல்லுவது போலச் சாய்ந்து கிடந்தது. அதிலேயிருந்து சரிந்த ஒரு சில கற்கள் வருவார் போவார் உட்காருவதற்கு எனப் போடப்பட்ட விசிப்பலகையாக அமைந்தன. செம்பட்டைத் தலையோடு சிறுவன் ஒருவன் கையில் ஒரு கோல் வைத்துக் கொண்டு செங்கோல் ஏந்திய அரசனைப் போல விளங்கினான். அவன் குடிகளாகிய ஆடுகளும் மாடுகளும் அவன் சொற்படி கேட்டு நடந்தன. செங்கற்பட்டு நோக்கிச் செல்லும் பஸ்ஸின் மீது இவர்கள் கண்ணோட்டம் சென்றது. எதிர்பார்த்த சில நிமிஷங்களில் பஸ் வந்தது. டிரைவரின் பார்வை இவர்கள் மீது விழுந்த காரணத்தால் பஸ் நின்றது. மூவரும் ஏறிய பிறகு தன் வழக்கமான இரைச்சலோடு புறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/75&oldid=898270" இலிருந்து மீள்விக்கப்பட்டது