பக்கம்:வழுக்கு நிலம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ரா. சீனிவாசன் பார்வதிக்கு இந்தப் பயணம் உல்லாசத்தைக் கொடுக்கா விட்டாலும் உற்சாகத்தைக் கொடுத்தது. சென்னையில் தன் கணவன் வீட்டில் அண்மையில் இருந்த வாழ்வின் சோர்வை மறக்க இது ஒரு மாறுதலாக அமைந்திருந்தது. தான் உட்கார்ந்திருந்த சன்னலின் வழியாக வழியில் சிறு குன்றுகள் சில காட்சியளித்தன. வறண்டு கிடந்த அந்தக் குன்றுகளில் ஆங்காங்கே சிறு முட்செடிகள் காணப்பட்டன. பஸ் செங்கல்பட்டை அடைந்து விட்டது என்பதை வழியில் வந்த ஒரு பெரிய ஏரி அறிவுறுத்தியது. சாலையின் இருபக்கமும் ஆங்காங்கே ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மரங்கள் பச்சைப் பசேல் என்று காட்சியளித்தன. பஸ் நிலையத்துக்கு வந்து நின்றது. அதற்குமேல் தொடர்ந்து செல்லும் விருப்பம் அதனிடத்தில் இல்லை என்று அறிவிப்பது போல அங்கேயே நின்றுவிட்டது. . "சாமி! ஏறுங்க வண்டியில்" என்று சொல்லிய வண்ணம் மெலிந்த உருவத்தோடு கையில் சவுக்கு வைத்துக்கொண்டு நின்றிருந்த ஓர் ஆள் பணிவோடு வரவேற்றான். "கீழை வீதிக்குப் போகவேண்டும் என்ன கேட்கிறாய்?" "பத்தனா கொடுங்க சாமி?” "எட்டணா தருகிறேன்." வண்டி புறப்பட்டது. டக் டக் என்ற சப்தத்தோடு தார் போடாத சந்து வழியாகச் சென்றது. "இங்கே தான் நிறுத்தப்பா!" ஒரு பெரிய மாடி வீட்டின் முன்னால் நின்றது. மாடி வீட்டுக்கு உரியவர் என்பதைத் தெரிவிப்பது போன்று தொந்தியசைய முந்தி ஒருவர் வந்து வரவேற்றார். "வாங்க! வாங்க! முன்னாடியே தெரிந்திருந்தால் காரை அனுப்பி வைத்திருப்பேனே!" வண்டிக்காரன் சில்லறையை வாங்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். வீட்டிலிருந்த வேலையாள் ஒருவன் வந்து பெட்டியை எடுத்து உள்ளே வைத்தான். கூடத்திலிருந்த சோபா' ஒன்றில் மாணிக்கமும் அவன் அப்பாவும் உட்கார்ந்தார்கள். முதன் முதலில் மணமகளை நேரே பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்வதி வீட்டு உள்ளறைக்குச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/76&oldid=898271" இலிருந்து மீள்விக்கப்பட்டது