பக்கம்:வழுக்கு நிலம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலம் 75 'மீனா! மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கிறார்கள்" என்று பெண்ணின் தாயின் குரல் கேட்டது. அப்பொழுதுதான் மீனாட்சி கண்ணாடிமுன் நின்று அவசரமாகத் தன்னை ஒப்பனை செய்து கொண்டிருந்தாள். பார்வதி மீனாவின் தாயை முதலில் சந்தித்தாள். "ஏன்! அம்மா வரவில்லையா?” “வீட்டைப் பார்த்துக் கொள்ள அம்மா நின்று விட்டார்கள்.” சிறிது நேரத்திற்கெல்லாம் ஒப்பனை முடிந்ததும் பார்வதியின் வருங்கால அண்ணி பார்வதியிருந்த இடத்திற்கு வந்து நின்றாள். பார்வதி அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். அழகின் வடிவம் என்றால் இவளைத்தான் சொல்ல வேண்டும் என்று அவள் மனம் எண்ண ஆரம்பித்தது. தான் பார்த்த சினிமா நடிகைகளின் முகவெட்டோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். உண்மையில் அண்ணன் பாக்கியசாலி தான் என்று அவள் மனம் முடிவு கட்டியது. அங்கே விரித்துப் போடப்பட்ட பாயில் மீனாட்சி உட்கார்ந்தாள். பார்வதியும் பக்கத்தில் சிறிது தள்ளி உட்கார்ந்தாள். "ஏன் அக்கா! கார் பஸ் நிலையத்துக்கு வரவில்லையா?” மெல்லிய குரலில் பார்வதியிடம் சொல்லிய சொற்கள் இவை. "வருகிறவரை அப்பா காத்துக்கொண்டிருக்கவில்லை." தட்டில் சிற்றுண்டியும் குவளையில் காப்பியும் முன்னால் வைக்கப்பட்டன. "சாப்பிடக்கா!" அதைச் சாப்பிட்டுக் கொண்டே அண்ணன் இருந்த கூடத்தைப் பார்வதி பார்த்தாள். கதவு திறந்திருந்த அதன் வழியாக மாணிக்கத்தின் பார்வைகள் இங்கேயே சுற்றி வட்ட மிடுவதைப் பார்வதி உணர்ந்து கொண்டாள். அவன் பார்வைக்குத் தடையாகத் தான் இருக்கக்கூடாது என்று சற்று ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள். அண்ணியின் பார்வையும் அண்ணன் மீது விழுந்து கொண்டிருந்ததை நுட்பமாக உணர்ந்து கொண்டாள். கூடத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த பேச்சுரையும் காதில் விழுந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/77&oldid=898273" இலிருந்து மீள்விக்கப்பட்டது