பக்கம்:வழுக்கு நிலம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ரா. சீனிவாசன் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கிறாயா? பெண்ணாகப் பிறந்தாலே வாழ்வு சீராக அமையச் சிந்திக்க வேண்டியதுதான். ஒரே வீட்டில்தான் பிறந்தோம். அண்ணனுக்குச் சீரான வாழ்வு. அவனை அண்டி வந்த அண்ணிக்கு உரிமையான வாழ்வு. அதே வீட்டில் பிறந்த ஓர் மகளுக்குச் சீரான வாழ்வு ஏன் கிடைக்கக் கூடாது? இயற்கை இரண்டு கண்களைக் கொடுத்திருக்கிறது. ஒன்று பார்வை மங்கி இருளடைந் திருக்கிறது. மற்றொன்று ஒளியுடன் திகழ்கிறது. ஒளியுள்ள கண்ணை ஒளியிழக்கச் சொல்லவில்லை. வாழ்க அண்ணன், நன்றாக வாழட்டும்; ஆனால் என் வாழ்விலும் அந்த ஒளி உண்டாக்க வேண்டாமா? ஒரு மரத்தில் இரண்டு கிளைகள் வளர்ந்தன. ஒன்று மட்டும் பட்டுப் போவதில் என்ன நியாயம் இருக்கிறது? அசையாமல் அந்த வாசலை நோக்கிய வண்ணம் நின்ற பார்வதியின் உள்ளத்தில் எண்ண அலைகள் பாய்ந்தன. ஒன்றும் தோன்றாதவளைப் போல அதையே சற்று உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி, கலியாணத்துக்காக எடுத்துக் கொடுத்திருந்த கைத்தறி சேலையைக் கட்டியிருந்தாள். ஒரே சேலையைப் பலமுறை தோய்த்துக் கட்டி வந்ததால் அந்தச் சேலை மிகவும் வாட்டம் உற்றிருந்தது. ஒய்வு இல்லாமல் பணி செய்து வந்ததால் அந்த வேலைக்காரியின் ஒட்டிய கன்னங்களைப் போலவே ஒளியிழந்து வதங்கிக் கிடந்தது. 'ஏன்'மா ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? அவர் கலியாணத்திற்கு வரவில்லையே என்று. அதற்காக வருந்து கிறீர்களா..? அதற்காக வருத்தப்பட்ட நாட்கள் பார்வதியின் நினைவிற்கு வந்தன. நெஞ்சில் ஒரு குறை இருந்து அரித்துக் கொண்டே இருந்தது. பெரிய அவமானமாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அங்கே வந்தவர்களுக்கெல்லாம். ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிய அந்த நினைவுகள் வரத் தொடங்கின. அந்த நினைவுகள் எல்லாம் நெஞ்சின் அலைகளின் ஆழத்தில் அமிழ்ந்து வாழ்வின் அப்போதைய நிலைமை நெஞ்சின் மேல்பாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்தது. "அதெல்லாம் ஒன்றும் இல்லை. அது அவர் விருப்பம்." "ஆமாம்மா, அதைத்தான் நானும் சொல்லலாம் என்று நினைத்தேன். இதற்கெல்லாம் வீணாக வருந்திக் கொண்டி ருக்கக் கூடாது அம்மா!” என்றாள் வேலைக்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழுக்கு_நிலம்.pdf/98&oldid=898323" இலிருந்து மீள்விக்கப்பட்டது