பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் ஒரே பொருள் பற்றிச் சிறந்த கவிதையும் தோன்றலாம். மிக மட்டமான செய்யுளும் தோன்றலாம். தாழ்ந்த பொருள் பற்றி உயர்ந்த கவிதையும் தோன்றக் கூடும், உயர்ந்த பொருள் பற்றித் தாழ்ந்த கவிதையும் தோன்றக்கூடும். எனவே பொருளின் பெருமைக்கும் சிறுமைக்கும் ஏற்பக் கவிதையின் பெருமையும் சிறுமையும் அமையும் என்று கூறுதல் முற்றும் பொருந்தாது. கவிதை சிறப்பது அதனைப் படைக்கும் கவிஞனின் அநுபவத்தினைப் பொறுத்து வருவது. அவன் அநுபவத்தைக் கூறும் முறையையும் பொறுத்தது. கவிதை மனநிலை: கவிதை என்பது காணும் பொருள்களை ருணிப்பதில் இல்லை, அப்பொருள்களைக் காணுங்கால் அவனிடம் எழும் மனநிலையில் அது உள்ளது. அதே மனநிலைக்கு ஒரு வடிவம் கொடுத்து அழகிய சொற்களால் ஓவியமாக அமைப்பதே கவிதை யாகும். கவிதையைப் படிக்கும் நம்மிடத்திலும் அதே மனநிலையை உண்டாக்க வல்லது கவிதை. திருக்குற்றால மலைக்கு நாம் எத்தனையோ முறை போயிருக்கின்றோம், பல இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டுத் திளைத்திருக்கின்றோம் . ஒருவகை அநுபவத்தையும் பெற்றிருக்கின்றோம். குமரகுருபர அடிகள் பெற்ற அநுபவம் இதோ: சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடும் ஒருபால் சினப்புலியும் மடப்பினையும் திளைத்திருக்கும் ஒருபால் வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால் விடஅரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால் છે? § இதில் இருப்பதை விட இருக்க வேண்டியவற்றைக் கூறுகிறார் கவிஞர். கற்பனையில் அவர் காணும் காட்சியை நாம் காணும் பொழுது நாம் எல்லையற்ற இன்பத்தில் ஈடுபடுகின்றோம். உண்மையான கவிதையில் உயிர் இருக்கும் உயிர்க்களையும் இருக்கும். மட்ட ரகமான செய்யுளில் உயிர் இருக்காது. சவம் போல் கிடக்கும். உறங்கும் மனிதனையும் சவத்தையும் கண்டு பிடிப்பதைப் போலத்தான் கவிதையின் மூச்சை நாம் உணரவேண்டும். ஓர் ஆங்கிலத் திறனாய்வாளர் "கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேற்றுமை மின்னேற்றம் பெற்ற மின் கலத்திற்கும் மின்னேற்றம் எரிந்து போன மின்கலத்திற்கும் உள்ள வேற்றுமையாகும் " என்று கூறியிருப்பதை ஈண்டுச் சிந்தித்துப் பார்க்கலாம். புட்ப ராகத்திற்கும் அசல் வைரத்திற்கும் தரம் கண்டு சொல்லும் வல்லுநர்களைப் போன்ற கவிதைத்